வாஷிங்டன் சுந்தர் சந்தேகம்: இலங்கை டெஸ்ட் தொடருக்கு
புதுடில்லி: இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு, இந்தியாவின் வாஷிங்டன் சுந்தர் தேர்வு செய்யப்படுவது சந்தேகம்.
அடுத்த மாதம் இலங்கை செல்லவுள்ள இந்திய அணி, இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட், வரும் ஆக. 15ல் காலேயில் துவங்குகிறது. இரண்டாவது டெஸ்ட், ஆக. 23-27ல் கொழும்புவில் நடக்கவுள்ளது.
இத்தொடருக்கான இந்திய அணி நாளை அறிவிக்கப்பட உள்ளது. வீரர்களின் உடற்தகுதி, அஜித் அகார்கர் தலைமையிலான தேர்வுக்குழுவினருக்கு தொல்லையாக உள்ளது. காயத்தில் இருந்து மீண்டு வரும் வேகப்பந்துவீச்சாளர் பும்ரா, சுழற்பந்துவீச்சு 'ஆல்-ரவுண்டர்' வாஷிங்டன் சுந்தர், முதல் போட்டிக்கு முன், முழுஉடற்தகுதி பெறுவது சந்தேகம். ஏற்கனவே ஹர்ஷித் ராணா, நிதிஷ் குமார் ரெட்டி, தொடையின் பின்பகுதி காயத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சுழற்பந்துவீச்சாளர் இடத்துக்கு ரவிந்திர ஜடேஜா, மானவ் சுதார், குல்தீப் யாதவ் தேர்வாகலாம். சமீபத்தில் இலங்கை 'ஏ' அணிக்கு எதிரான டெஸ்டில், 6 விக்கெட் சாய்த்த சுழற்பந்துவீச்சாளர் சரண்ஷ் ஜெயின் வாய்ப்பு பெறலாம். ஒருவேளை பும்ரா தேர்வாகாத பட்சத்தில் வேகப்பந்துவீச்சாளர்களாக முகமது சிராஜ், குர்னுார் பிரார், பிரசித் கிருஷ்ணா இடம் பெறலாம்.