விதியை மீறி நள்ளிரவிலும் இயங்கும் கிரஷர்களால் அருங்குன்றம் சுற்றுவட்டாரத்தில் சுகாதாரம் பாதிப்பு
உத்திரமேரூர்: அருங்குன்றம் சுற்றுவட்டாரத்தில் விதியை மீறி நள்ளிரவிலும் இயங்கும் கல் அரவை தொழிற்சாலைகளால், சுகாதாரம் பாதிக்கப்படுவதாக அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
உத்திரமேரூர் ஒன்றியத்தின் பல்வேறு கிராமங்களில் 50க்கும் மேற்பட்ட தனியார் கல் அரவை தொழிற்சாலைகள் இயங்குகின்றன.
இதில், பெரும்பாலானவை விதிகளை மீறி இரவு நேரங்களில் இயங்குவதாகவும், இதனால் பல்வேறு சுகாதார பிரச்னைகள் ஏற்படுவதாக கிராம மக்கள் புகார் கூறி வருகின்றனர்.
இதுகுறித்து, அருங்குன்றம் கிராம மக்கள் கூறியதாவது:
கல் அரவை தொழிற்சாலைகள் பொதுவாக காலை 7:00 மணிக்கு தொடங்கி, இரவு 10:00 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதி வழங்கிப்படுகிறது.
ஆனால், அருங்குன்றம், மதுார், பழவேரி, சீத்தா வரம் உள்ளிட்ட பகுதி களில் இரவு 10:00 மணிக்கு மேல் நள்ளிரவு வரை கிரஷர்கள் செயல் படுகின்றன.
இதனால், கிரஷர்கள் அருகே உள்ள குடியிருப்புகளில் சுற்றுச்சூழல் பாதிப்பு, காற்று மாசு, மூச்சு திணறல் உள்ளிட்ட சுகாதார பிரச்னைகள் ஏற்படுகின்றன.
மேலும், கிரஷர்கள் செயல்பாட்டின் சத்தத்தால் இரவு நேரங்களில் துாக்கம் பாதிக்கப்படுவதாக குற்றஞ் சாட்டுகின்றனர்.
எனவே, அருங்குன்றம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் இரவு நேரங்களில் இயங்கும் கல் அரவை தொழற்சாலைகள் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
காஞ்சிபுரம் மாசு கட்டுப் பாட்டு வாரிய அலுவலர் ஒருவர் கூறியதாவது:
கல் அரவை தொழிற்சாலைகள் விதிகளுக்கு உட்பட்டு இயக்கப்படு கின்றனவா என்பது குறித்து அவ்வப்போது ஆய்வு செய்து உறுதிப்படுத்தப் படுகிறது. நள்ளிரவு வரை இயக்குவது குறித்து இதுவரை புகார் ஏதும் வரவில்லை. இதுகுறித்து ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
மேலும்
-
ஒரே வாகனத்துக்கு 250 அபராத ரசீதுகள்! அபராத மதிப்பு ரூ.3 லட்சம்
-
பல மாவட்டங்களில் குடிநீர் தட்டுப்பாடு அதிகரிப்பு; மாற்று ஏற்பாடு செய்யாமல் வாரியம் அலட்சியம்
-
குளித்தலையில் டாக்டர் பற்றாக்குறை கரூர், திருச்சிக்கு செல்லும் நோயாளிகள்
-
மாயனுார் கதவணைக்கு 300 கன அடி நீர்வரத்து
-
அள்ளப்படாத குப்பை: தொற்று அபாயம்
-
சேதமடைந்த நீரேற்று நிலைய தடுப்பு சுவர்: ஊழியர்கள் அச்சம்