ஒரே வாகனத்துக்கு 250 அபராத ரசீதுகள்! அபராத மதிப்பு ரூ.3 லட்சம்

1

கோவை: பல ஆண்டுகளாக இயக்கப்படாமல் இருப்பதாக கூறப்படும், TN 37 AF 4170 என்ற பதிவு எண்ணுடைய இருசக்கர வாகனத்திற்கு 249 அபராத ரசீதுகள் நிலுவையில் உள்ளன. இதன் அபராத மதிப்பு 3 லட்சம் ரூபாய்.

இதுதொடர்பாக, பரிவாஹன் இ--சலான் இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யப்பட்ட வாகன ஆய்வு அறிக்கை ஆவணங்களை ஆய்வு செய்தபோது, பல்வேறு முரண்பாடுகள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன.

பரிவாஹன் இ---சலான் இணையதளத்தில் TN 37 AF 4170 என்ற பதிவு எண்ணை பதிவிட்டபோது, 249 அபராத நிலுவை பதிவுகளும், ஒரு அபராதம் மட்டும் செலுத்தப்பட்டதாகவும் பதிவாகியுள்ளன. 2019ம் ஆண்டு முதல் 2026 மே வரை இந்த அபராத ரசீதுகள் பதிவாகி உள்ளன.

சில ரசீதுகளில் இருசக்கர வாகனம் என்றும், ஒரு சில ரசீதுகளில் பஸ் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளன. ஒரே பதிவு எண்ணுக்கு பல விதமான வாகன வகைகள் இடம்பெற்றுள்ளன.

வாகன உரிமையாளர், முகவரி, போன்ற தகவல்கள் இல்லை. அபராத தொகை, அதிகாரிகள் பெயர் உள்ளன. பதிவு எண் TN37AF4170 என கொடுத்துவிட்டு, அறிக்கையின் புகைப்படத்தில் உள்ள வாகனத்தின் பதிவு எண் வேறாக உள்ளன.

ஒரே இடத்தில் எடுக்கப்பட்ட படத்தை பயன்படுத்தி பல ரசீதுகளில் 2022, 2024, 2025, 2026 ஆகிய ஆண்டுகளில் பல்வேறு தேதிகளில் இந்த வாகனத்திற்கு அபராதங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

சில பதிவுகளில் நாகலாந்து மாநிலத்தை சேர்ந்த முகவரி இடம்பெற்றுள்ளது. சில பதிவுகளில் கோவை முகவரி உள்ளது. இது போன்ற ஏகப்பட்ட குளறுபடிகள் தொழில்நுட்ப கோளாறால் ஏற்பட்டதா அல்லது போலி அபராத ரசீது உருவாக்கப்பட்டுள்ளதா என கண்டறிய வேண்டும்.

@quote@ இ-சலான் பதிவேற்றத்தில் ஏ.ஐ., கேமராக்கள் பதிவு செய்யும் போது சில குறைபாடுகள் உள்ளன. அதை சரி செய்து வருகிறோம். இந்த புகார் குறித்து உடனடியாக விசாரிக்கிறோம்.

- கண்ணன் போலீஸ் கமிஷனர்quote

Advertisement