சாலையில் பறிமுதல் வாகனங்கள் விபத்து அச்சத்தில் வாகன ஓட்டிகள் திருத்தணி போலீசார் அலட்சியம்

திருத்தணி: திருத்தணி காவல் நிலையத்தின் முன், திருத்தணி - கன்னிகாபுரம் நெடுஞ்சாலையில் மணல் கடத்தலில் சிக்கி பறிமுதல் செய்த டிப்பர் லாரிகள் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால், வாகன ஓட்டிகள் விபத்து அச்சத்தில் தவித்து வருகின்றனர்.

திருத்தணி - கன்னிகாபுரம் நெடுஞ்சாலையில், இந்திரா நகர் பகுதியில் திருத்தணி காவல் நிலையம் இயங்கி வருகிறது. இந்த நெடுஞ்சாலை வழியாக அரசு மற்றும் தனியார் பேருந்துகள், லாரி, கார், வேன் உள்ளிட்ட வாகனங்கள், 24 மணி நேரமும் சென்று வருகின்றன.

கடந்த 15 நாட்களுக்கு முன் மண் கடத்தியதாக, 10 டிப்பர் லாரிகளை பறிமுதல் செய்த போலீசார், திருத்தணி காவல் நிலையம் முன், திருத்தணி - கன்னிகாபுரம் நெடுஞ்சாலையோரம் நிறுத்தி வைத்துள்ளனர்.

இந்த வாகனங்கள், சாலையை ஆக்கிரமித்து வரிசையாக நிறுத்தி வைத்துள்ளதால், வாகன ஓட்டிகள் விபத்து அச்சத்தில் சென்று வருகின்றனர்.

எனவே, திருவள்ளூர் கலெக்டர் கவிதா ஆய்வு செய்து, சாலையில் நிறுத்தப்பட்டுள்ள பறிமுதல் வாகனங்களை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement