பாக்.,கின் தவறான நடவடிக்கைக்கு கற்பனைக்கு எட்டாத கடும் பதிலடி: ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் எச்சரிக்கை
டிராஸ்: “பாகிஸ்தானின் எந்தவொரு தவறான நடவடிக்கைக்கும், அவர்களின் கற்பனைக்கும் அப்பாற்பட்ட வகையில் கடுமையான பதிலடி கொடுக்கப்படும்” என, ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்து உள்ளார்.
யூனியன் பிரதேசமான லடாக்கின் டிராஸ் பகுதியில் உள்ள கார்கில் போர் நினைவிடத்தில், 27வது கார்கில் வெற்றி தின நிகழ்ச்சி நேற்று நடந்தது.
இறையாண்மை
இதில் பங்கேற்று பா.ஜ., மூத்த தலைவரும், ராணுவ அமைச்சருமான ராஜ்நாத் சிங் பேசியதாவது:
கடந்த 1999ல் நடந்த கார்கில் போரில் நம் நாட்டின் வெற்றி, பாரத மாதாவின் கிரீடத்தில் பதிக்கப்பட்ட வைரம். கார்கில் வெற்றி என்பது வெறும் ராணுவ அல்லது ராஜதந்திர வெற்றி மட்டுமல்ல; நம் வீரர்கள், அசைக்க முடியாத துணிச்சலையும் வீரத்தையும் வெளிப்படுத்தினர்.
இதேபோல் ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில் நடத்திய பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக நடத்தப்பட்ட 'ஆப்பரேஷன் சிந்துார்' நடவடிக்கையின் மூலம் பயங்கரவாதத்திற்கு ஆதரவளிப்போர், அவர்களுக்கு துணை நிற்போருக்கு நம் படையினர் தகுந்த பதிலடி அளித்தனர்.
பயங்கரவாதத்தைக் கொண்டு நம் நாட்டை அச்சுறுத்த முயற்சிப்போரின் கதி என்னவாகும் என்பதை இந்த நடவடிக்கை தெளிவாக நிரூபித்தது.
நம் அண்டை நாடான பாகிஸ்தான், பயங்கரவாதத்தை அரசின் கொள்கையாக மாற்றிக் கொண்டுஉள்ளது.
எனவே, பாக்.,கின் எந்தவொரு தவறான நடவடிக்கைக்கும், கற்பனை செய்து பார்க்க முடியாத அளவுக்கு கடுமையான பதிலடி அளிக்கும் திறன், நம் படையினருக்கு உள்ளது. நம் நாட்டின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டிற்கு எதி ரான எந்தவொரு தீய முயற்சியும் அதே கதியைத் தான் சந்திக்கும்.
பாகிஸ்தான் சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ள இந்திய பகுதியான 'பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர்' குறித்த விவகாரத்தைத் தவிர, அந்த நாட்டுடன் வேறு எந்த பேச்சுவார்த்தையும் இருக்காது.
புதிய வழிகள்
போர்க்கப்பல்களை வடிவமைப்பதில் நம் நாடு கவனம் செலுத்தும் நிலையில், பாகிஸ்தான் பயங்கரவாத செயல்களைத் திட்டமிடுவதில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
நாம், புதிய கண்டுபிடிப்புகளுக்கான வழிகளைத் தேடும்போது, அந்நாடோ ஊடுருவலுக்கான புதிய வழிகளைத் தேடுகிறது.
நம் நாட்டில் தரவு மையங்களை உருவாக்கும் முயற்சிகள் அரங்கேறும் நிலையில், அந்நாடு பயங்கரவாத மையங்களை உருவாக்குவதில் மும்முரமாக உள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
மேலும்
-
ஒரே வாகனத்துக்கு 250 அபராத ரசீதுகள்! அபராத மதிப்பு ரூ.3 லட்சம்
-
பல மாவட்டங்களில் குடிநீர் தட்டுப்பாடு அதிகரிப்பு; மாற்று ஏற்பாடு செய்யாமல் வாரியம் அலட்சியம்
-
குளித்தலையில் டாக்டர் பற்றாக்குறை கரூர், திருச்சிக்கு செல்லும் நோயாளிகள்
-
மாயனுார் கதவணைக்கு 300 கன அடி நீர்வரத்து
-
அள்ளப்படாத குப்பை: தொற்று அபாயம்
-
சேதமடைந்த நீரேற்று நிலைய தடுப்பு சுவர்: ஊழியர்கள் அச்சம்