பார்லியில் எதிர்க்கட்சிகள் கடும் அமளி; இரு அவைகளும் ஒத்திவைப்பு

2


நமது டில்லி நிருபர்




பார்லிமென்ட் மழைக்கால கூட்டத்தொடரில் இன்று (ஜூலை 27) எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டதால் இரு அவைகளும் மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டன.

பார்லிமென்டின் மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 20ம் தேதி தொடங்கியது. அப்போது, நீட் தேர்வு வினாத்தாள் கசிவிற்கு எதிர்ப்பு தெரிவித்து பார்லி.யை நோக்கி கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினரும், மாணவர்களும் பேரணி நடத்தினர். கல் வீசி தாக்குதல் நடத்தப்பட்டதால், போலீசாரும் பதிலுக்கு தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.

இந்த விவகாரத்தை கையில் எடுத்த காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், 'நீட்' வினாத்தாள் கசிவு விவகாரத்தில், பா.ஜ.,வைச் சேர்ந்த மத்திய கல்வி அமைச்சராக இருந்த தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்யும் வரை, பார்லி.,யை நடத்த விட மாட்டோம் என்று பிடிவாதம் பிடித்தன.

இதனால், கூட்டத்தொடர் தொடங்கிய முதல் ஐந்து நாட்கள், லோக்சபா, ராஜ்யசபா என, இரு சபைகளும் எந்த அலுவல்களும் இன்றி முடங்கின. இந்தச் சூழலில், மத்திய கல்வி அமைச்சர் பதவியை தர்மேந்திர பிரதான் நேற்று முன்தினம் ராஜினாமா செய்தார்.

இதையடுத்து, டில்லி ஜந்தர் மந்தரில் 36 நாட் களாக நடந்த போராட்டம் முடிவுக்கு வந்தது. சனி, ஞாயிறு விடுமுறைக்கு பின், பார்லிமென்ட் இன்று (ஜூலை 27) மீண்டும் காலை 11 மணிக்கு கூடியது. காமன்வெல்த் போட்டிகளில் பதக்கம் வென்ற இந்திய வீரர்களுக்கு லோக்சபாவில் சபாநாயகர் ஓம் பிர்லா பாராட்டு தெரிவித்தார்.

பிறகு அவைக்கு மத்தியில் திரண்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். டில்லி போராட்டத்தில் இளைஞர்கள் மீதான தடியடி சம்பவம் குறித்து விவாதிக்க கோரி எதிர்க்கட்சி எம்பிக்கள் கடும் அளியில் ஈடுபட்டனர்.

சபாநாயகர் ஓம்பிர்லா பலமுறை எச்சரித்தும் எம்பிக்கள் கண்டு கொள்ளாமல் தொடர் அமளியில் ஈடுபட்டனர். இதனால் கடும் கூச்சல், குழப்பம் நிலவியது. அவையை மதியம் 12 மணி வரை சபாநாயகர் ஓம்பிர்லா ஒத்திவைத்தார். அவர், ''தொடர்ந்து அமளியில் ஈடுபடும் எம்பிக்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்'' என எச்சரித்தார்.

2 மணி வரை...




மீண்டும் லோக்சபா மதியம் 12 மணிக்கு கூடிய போது, தேசிய அளவிலான அரசு போட்டி தேர்வுகளில் வினாத்தாள் கசிய விடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கும் வகையில், புதிய சட்டத் திருத்த மசோதா அமளிக்கு இடையே தாக்கல் செய்யப்பட்டது. பிறகு அமளி காரணமாக அவையை மதியம் 2 மணி வரை சபாநாயகர் ஓம்பிர்லா ஒத்திவைத்தார்.

ராஜ்யசபா




அதேபோல் ராஜ்யசபாவிலும் எதிர்க்கட்சி எம்பிக்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். இதனால் மதியம் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. மதியம் 12 மணிக்கு ராஜ்யசபா கூடிய போது தொடர்ந்து எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டதால் மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

எதிர்க்கட்சியின் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருவதால், கூட்டத்தொடரை எதிர்க்கட்சிகள் சுமுகமாக நடத்த விடுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

Advertisement