அடங்க மறுக்கும் குரங்கு: பிடிக்க துடிக்கும் வனத்துறை

வல்லம் பகுதியில் பொதுமக்களை கடித்து அச்சுறுத்தி வரும் வனத்துறையினர் வைத்த கூண்டில் சிக்காத குரங்கு, மீண்டும் சிறுமியை தாக்கியது.

செஞ்சி அடுத்த வல்லம் ஊராட்சி மருதேரி கிராமத்தில் கடந்த 3 மாதங்களாக ஆண் குரங்கு பொதுமக்களை கடித்து அச்சுறுத்தி வருகிறது. குறிப்பாக சிறுவர்களை துரத்திக் கடிக்கிறது.

கடந்த 21ம் தேதி வல்லம் அரசு உயர்நிலைப் பள்ளியில் 8ம் வகுப்பு மாணவியை கடித்ததில் அவரின் காது அறுந்தது. இது குறித்து கிராம மக்கள் மாவட்ட கலெக்டரிடம் புகார் மனு கொடுத்தனர்.

மாவட்ட வன அலுவலர் பிரின்ஸ் குமார் வல்லத்தில் ஆய்வு செய்தார். பின், செஞ்சி வனச்சரகர் பழனிவேல் மேற்பார்வையில் 3 இடங்களில் குரங்கைப் பிடிக்க கூண்டு வைத்தனர்.

ஒரு வனவர், 2 வன காவலர்கள் வல்லத்தில் முகாமிட்டு தினமும் குரங்கின் நடவடிக்கைகளை கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில் காலை வீட்டுக்குள் பெற்றோருடன் இருந்த 5 வயது சிறுமியை தாக்கி நகத்தால் கிழித்துள்ளது. இது கிராம மக்களிடம் மேலும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

எனவே, வனத்துறையினர் உயிரியல் பூங்காக்களில் உள்ள டாக்டர்களை கொண்டு மயக்க ஊசி செலுத்தி குரங்கை பிடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement