மழைக்காலத்தில் சுவாச பிரச்னைகள் ஏற்பட காரணம் என்ன: டாக்டர் அகிலன் விளக்கம்
மழைக்காலத்தில் ஆரோக்கியமான சுவாசத்திற்கு வீட்டை சுத்தமாக வைத்திருக்க வேண்டுமென, கடலுார், மஞ்சக்குப்பம் பாஷ்யம் தெருவில் உள்ள ஆஸ்துமா, அலர்ஜி, குறட்டை, சுவாசம் மற்றும் நுரையீரல் சிறப்பு டாக்டர் அகிலன் கூறினார். இதுகுறித்து அவர், மேலும் கூறியதாவது: மழைக்காலத்தில் காற்றில் உள்ள அதிகப்படியான ஈரப்பதம், வீடுகளில் ஏற்படும் ஈரம், பூஞ்சை வளர்ச்சி மற்றும் நோய் தொற்று ஆகியவை நுரையீரலை பாதிக்கிறது.
இதனால் இருமல், சளி, இரைச்சலுடன் கூடிய சுவாசம், நெஞ்சு அசவுகரியம் அல்லது மூச்சுத்திணறல் ஏற்படலாம். ஆஸ்துமா, ஒவ்வாமை நோய் உள்ளவர்கள் மற்றும் முதியவர்கள் கவனமாக இருக்க வேண்டும். பூஞ்சை வளர காரணமான, ஈரப்பதம் மிகுந்த மற்றும் காற்றோட்டம் இல்லாத வீடுகள், அதிகரிக்கும் வைரஸ் மற்றும் பாக்டீரியா தொற்றுகள், ஆஸ்துமா அறிகுறிகளை துாண்டக்கூடிய திடீர் வானிலை மாற்றங்கள், துாசி, மாசுபாடு மற்றும் தேங்கி நிற்கக் கூடிய அசுத்தமான நீர் ஆகியவற்றால் மழைக் காலத்தில் சுவாச பிரச்னைகள் ஏற்பட காரணங்களாகும். வீட்டை சுத்தமாகவும், உலர்ந்த நிலையிலும், நல்ல காற்றோட்ட வசதியுடனும் வைத்துகொள்வது; ஈரமான இடங்கள் மற்றும் அசுத்தமான நீர் தேங்கி நிற்கக் கூடிய இடங்களை தவிர்ப்பது; ஒவ்வாமை அல்லது நுரையீரல் பிரச்னைகள் இருந்தால் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் முகக்கவசம் அணிவது;
வழக்கமாக கைகளை சுத்தமாக கழுவுவது; சுத்தமான, பாதுகாப்பான குடிநீரை குடிப்பது; புகை பிடிப்பதை தவிர்ப்பது; துாசி மற்றும் மாசு ஏற்படும் இடங்களில் இருந்து விலகுவது; ஆகியவற்றின் மூலமாக நுரையீரலை ஆரோக்கியமாக வைத்திருக்க முடியும். ஆஸ்துமா அல்லது நாள்பட்ட நுரையீரல் அடைப்பு இருந்தால் மருந்துகளை தவறாமல் உட்கொள்ள வேண்டும்.
இன்ேஹலரை எப்போதும் உடன் வைத்திருக்க வேண்டும். குணமாகாத இருமல், சுவாச பிரச்னைகளுடன் கூடிய காய்ச்சல், இரைச்சலுடன் கூடிய சுவாசம் அல்லது இறுக்கமான உணர்வு, தினசரி நடவடிக்கையின் போது, மூச்சுத்திணறல் ஏற்படுவது போன்ற அறிகுறிகள் தொடர்ந்தாலோ அல்லது மோசமடைந்தாலோ டாக்டரை அணுக வேண்டும்.
ஆரம்ப கட்ட சிகிச்சையானது தீவிரமான பிரச்னைகளை தடுக்க உதவும். முன்னெச்சரிக்கையுடன் இருந்தால் மழைக்காலத்தில் எளிதாக சுவாசிக்கவும், ஆரோக்கியமாக இருக்கவும் உதவும். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும்
-
புட்டபர்த்தி பிரசாந்தி நிலையத்தில் குரு பூர்ணிமா விழா கோலாகல கொண்டாட்டம்
-
சமரச தீர்வு மையத்தில் தமிழக நிதி அமைச்சர் ஆஜர்!
-
'மாதவிடாய் விடுப்பு கோரிய வழக்கில் அரசு எடுத்த நடவடிக்கை என்ன? ஐகோர்ட் கிளை கேள்வி
-
இணையவழி மோசடி புகார்களில் காப்பாற்றப்பட்டது ரூ.11,158 கோடி
-
24 மணிநேரம் 24 நிமிடங்கள் பறந்த ஏர்பஸ் விமானம்; வானில் அதிக நேரம் பறந்து சாதனை
-
வருமானம் ஈட்டும் கணவன் - மனைவி குடும்ப செலவை சமமாக பங்கிட வேண்டும்; விவாகரத்து வழக்கில் ஐகோர்ட் அதிரடி