மதுரையில் ரூ.60 கோடி மதிப்புள்ள மீனாட்சி கோவில் நிலம் அபகரிப்பு!

6

மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில், தினமும் பூஜை செய்வதற்காக ஏற்படுத்தப்பட்ட அறக்கட்டளைக்கு சொந்தமான, 60 கோடி ரூபாய் மதிப்புள்ள, 1.73 ஏக்கர் நிலத்தை விற்பனை செய்யும் நோக்கில், தனி நபர்களுக்கு பட்டா வழங்கியதோடு, பத்திரப்பதிவும் செய்ததாக, முன்னாள் தாசில்தார், சார் - பதிவாளர் உட்பட, 19 பேர் மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தி.மு.க., ஆட்சியில் இதுகுறித்து புகார் கொடுத்த நிலையில், ஐந்து ஆண்டுகளுக்குப் பின் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மதுரையில் உள்ள மீனாட்சி அம்மன் மற்றும் கள்ளழகர் கோவில்களுக்கு, தினமும் சேவை செய்வதற்காக, 'புதுக்கோட்டை ராஜகுமாரர் தட்சிணாமூர்த்தி துரைராஜா துரைராணி கட்டளை' என்ற பெயரில், 1930ல் சென்னை, சைதாப்பேட்டை சார் - பதிவாளர் அலுவலகத்தில், உயில் சாசனம் பதிவு செய்யப் பட்டது.

அனுமதி இல்லை




இதில், துரைராணி என்பவரால், மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சேவை செய்யவும், கட்டளை நிறைவேற்றவும், மதுரை சொக்கிக்குளம் சாய்ராம் பள்ளி வளாகத்தையொட்டி உள்ள, 'அசோத விலாஸ்' என்ற பங்களாவும், தோட்டமும் எழுதி வைக்கப்பட்டது.

இந்த பங்களாவை வாடகைக்கு விட்டு, அதில் கிடைக்கும் வருவாயை கொண்டு, கோவிலுக்கு சேவை செய்ய வேண்டும். விற்கவோ, அடமானம் வைக்கவோ அல்லது உரிமை மாற்றம் செய்யவோ அனுமதி இல்லை என்பது உயில் சாசனத்தின் சாராம்சம்.
Latest Tamil News கடந்த, 2016 ஜூன் 24ல் சிலர், இந்த இடத்தை கைப்பற்றும் வகையில், பட்டா கேட்டு வருவாய் துறைக்கு விண்ணப்பித்தனர். அதன் அடிப்படையில், மதுரை வடக்கு தாலுகா தாசில்தாரராக இருந்த அன்பழகன், கோவில் பெயரில் இருந்த சொத்துரிமையை நீக்கி, ராமாயி ஆயியார் உள்ளிட்ட ஒன்பது பேரின் பெயரில் பட்டா மாற்றம் செய்து கொடுத்தார்.

இதுகுறித்து, கோவில் நிர்வாகம் ஆட்சேபம் தெரிவிக்கவே, விசாரணை நடத்தப்பட்டு, அப்போதைய வி.ஏ.ஓ., அரசன், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.

தற்போது அரசன், மதுரை மேற்கு தாலுகாவில் வருவாய் ஆய்வாளராக உள்ளார். அன்பழகன் மீது துறை ரீதியான விசாரணையும், லஞ்ச ஒழிப்பு துறை சோதனையும் பரிந்துரைக்கப்பட்டது. அன்பழகன், தற்போது ராமநாதபுரம் கலெக்டரின் கூடுதல் நேர்முக உதவியாளராக உள்ளார்.

பட்டா மோசடி




இதன்பின், பட்டா வழங்கியதை ஆர்.டி.ஓ., ரத்து செய்து, கோவில் பெயரிலேயே பட்டா வழங்க உத்தரவிட்டார். தனி நபருக்கு பட்டா வழங்க, கோவில் நிர்வாகம் நீதிமன்றத்தில் தடை உத்தரவு பெற்ற நிலையில், அதை மறைத்து, பட்டாவில் கோவில் பெயர் நீக்கப்பட்டு, மீண்டும் பட்டா மோசடி அரங்கேறியது.

கடந்த, 2018 ஆக., 13ல், புதுக்கோட்டை கறம்பக்குடி ராமாயி ஆயியார், தஞ்சாவூர் சில்லத்துார் செந்தமிழ்ச்செல்வி, அம்பு கோவில் பிரேமா, ராஜ்குமார், புதுக்கோட்டை மச்சுவாடி முத்துராணி, ராஜேந்திரன், குழந்தையா, புஷ்பராஜ், ஜோதி, கீதா ஆகிய, 10 பேருக்கு பட்டா வழங்கப்பட்டது.

இந்த இடம், 2021 ஏப்., 16ல், துாத்துக்குடி மாவட்டம், முறப்பநாடு சார் - பதிவாளர் அலுவலகத்தில், சார் - பதிவாளர் அனந்தராமன் மூலம், மதுரை மாவட்டம், உசிலம்பட்டி இளையராஜா, திருவள்ளூர் ராமபுரம் அனிஷ் ஆகியோர் பெயரில், 'பவர் பத்திரம்' பதிவு செய்யப்பட்டது.

அந்தாண்டு ஜூலை 19ல், திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை சார் - பதிவாளர் பிரசாந்த் சந்தான கருப்பன் என்பவர் மூலம், நில அடமான பத்திரமும் பதிவு செய்யப்பட்டது. இதன் அடிப்படையில், கோவில் இடம், இளையராஜாவின் மனைவி கவிதா, அனிஷின் சகோதரர் பிரகாஷ் மற்றும் திண்டுக்கல், தென்மலை காளிக்குமார் ஆகியோருக்கு முறைகேடாக பதிவு செய்யப்பட்டது.

இதுகுறித்து, 2021ல் தி.மு.க., ஆட்சியில், மீனாட்சி கோவில் தரப்பில் புகார் செய்யப்பட்டது. ஆனால், எந்த நடவடிக்கையும் இல்லை. அறநிலைய துறையும் இந்த விஷயத்தை பொருட்படுத்தவில்லை. த.வெ.க., ஆட்சி அமைந்த நிலையில், அமைச்சர் ரமேஷ் உத்தரவுப்படி, மீண்டும் கோவில் நிர்வாக அதிகாரி செல்லத்துரையிடம் புகார் பெறப்பட்டது.

ராமாயி ஆயியார், செந்தமிழ்ச்செல்வி, பிரேமா, ராஜ்குமார், முத்துராணி, ராஜேந்திரன், குழந்தையா, புஷ்பராஜ், ஜோதி, கீதா, முன்னாள் வி.ஏ.ஓ., அரசன், முன்னாள் தாசில்தார் அன்பழகன், சார் - பதிவாளர் அனந்தராமன் மற்றும் இளையராஜா, கவிதா, அனிஷ், பிரகாஷ், காளிக்குமார் மற்றும் பிரசாந்த் சந்தான கருப்பன் ஆகிய 19 பேர் மீது, மதுரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

இதில், கோவில் கட்டளை நிலங்களை அபகரிக்கும் நோக்கில் கூட்டுச்சதி செய்து, நீதிமன்ற உத்தரவுகள், பத்திரப்பதிவு சட்ட விதிகளை மீறி பட்டா மாற்றம், பத்திரப்பதிவு மற்றும் அடமான பதிவு செய்ததாக வழக்கில் குறிப்பிடப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்டோரை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில், திண்டுக்கல் மாவட்டம், பழனி தண்டபானி சுவாமி மடத்திற்கு சொந்தமான, 100 கோடி ரூபாய் மதிப்பிலான நிலத்தை, தனி நபருக்கு பத்திரப்பதிவு செய்து கொடுத்த மோசடி வெளிச்சத்திற்கு வந்தது.

இது தொடர்பாக, சி.பி.சி.ஐ.டி., போலீசார், சார் - பதிவாளர் உள்ளிட்ட பலர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வரும் நிலையில், மதுரை மீனாட்சி கோவில் நிலம் மோசடி செய்யப்பட்ட விவகாரமும் வெளிச்சத்திற்கு வந்து, பக்தர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

Latest Tamil News @block_B@ 'பா.ஜ., தலைவர் மகனுடன் நட்பு'

மீனாட்சி அம்மன் கோவில் இடத்தை அபகரிக்கும் நோக்கில் மூளையாக செயல்பட்டது, மதுரை உசிலம்பட்டியை சேர்ந்த இளையராஜா. இவர் குறித்தும், கோவில் இடத்தை அபகரித்தது குறித்தும் வெளிச்சத்திற்கு கொண்டு வந்தது அறப்போர் இயக்கம்.

அதன் நிர்வாகியான ஜெயராமன் கூறியதாவது: இந்த மோசடி குறித்து நாங்கள், 2023ல் புகார் தெரிவித்தோம். பத்திரப்பதிவு துறையில் எப்படியெல்லாம் துஷ்பிரயோகம் செய்கின்றனர் என்று ஆய்வு செய்த போது தான், மீனாட்சி அம்மன் கோவில் இடத்தை மோசடியாக பதிவு செய்ததை கண்டுபிடித்தோம். இதில் ஈடுபட்ட இளையராஜா, பா.ஜ., மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் மகன் நயினார் பாலாஜியுடன் சேர்ந்து, சென்னையில் ஒரு ஏக்கர் நிலத்தை, ராதாபுரத்தில் ஒப்பந்த பத்திரப்பதிவு செய்தார்.

இதுகுறித்து நாங்கள் புகார் கொடுத்த பின், அந்த பத்திரப்பதிவு, 2023ல் ரத்து செய்யப்பட்டது. இளையராஜா பின்னணியை ஆய்வு செய்த போது தான், ஏற்கனவே மீனாட்சி அம்மன் கோவில் இடத்தையும் அவர் ஆக்கிரமித்ததை கண்டு பி டித்தோம். இதன் பின்னணியில் உள் ளவர்களையும் விசாரிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். block_B

Advertisement