'பிடிங்க பூங்கொத்து' :புதுமையாக கற்பிக்கும் ஆசிரியர், பள்ளிக்கு கவுரவம்: மதுரை கல்வித்துறையில் அமலுக்கு வந்தது புதிய திட்டம்

மதுரை: மதுரையில் அரசு பள்ளிகளில் புதுமையாகவும், தொழில்நுட்பங்களை பயன்படுத்தியும் கற்பிக்கும் ஆசிரியர்கள், பள்ளிகளை மாவட்ட அளவில் கவுரவிக்கும் வகையில் 'பூங்கொத்து' திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

அரசு பள்ளிகளில் கற்றல் கற்பித்தல், பள்ளி செயல்பாடுகளை கண்காணிக்க டி.இ.ஓ., சி.இ.ஓ.,க்கள் ஆய்வு செய்கின்றனர். முன் அறிவிப்பின்றியும் ஆய்வு நடக்கிறது. இதில் அர்ப்பணிப்புடன் செயல்படும் ஆசிரியர்களை அடையாளம் கண்டு பாராட்டு சான்று, பரிசு வழங்கி கவுரவிக்கும் திட்டத்தை சி.இ.ஓ., தயாளன் தொடங்கியுள்ளார்.

அவர் கூறியதாவது: வழக்கமான கற்பித்தலை தாண்டி புதுமையாக, ஏ.ஐ., தொழில் நுட்பத்தை பயன்படுத்தி மாணவருக்கு எளிதில் புரியும் வகையில் ஆசிரியர்கள் பலர் பாடம் கற்பிக்கின்றனர். அவர்களை கவுரவிப்பது தான் இத்திட்டத்தின் நோக்கம்.

என் ஆய்வில் நிலையூர் அரசு உயர் நிலைப் பள்ளியில் ஆங்கில ஆசிரியை நிர்மலா தேவி புதுமையான கற்பித்தலை வெளிப்படுத்தியது கவனம் பெற்றது. மாணவர்களுக்கு மனதில் பதியும் வகையில் கற்றல் உபகரணங்களை அவரே தயாரித்து, அர்ப்பணிப்புடன் கற்பித்தது, உபகரணத்தை பார்த்து மாணவரே ஆங்கில வார்த்தைகளை சொந்தமாக உருவாக்கியது பாராட்டும் வகையில் இருந்தது.

இதற்காக 'பூங்கொத்து' திட்டத்தில் மாவட்டத்தில் முதலாவதாக ஆசிரியை நிர்மலா தேவி, அப்பள்ளி தலைமையாசிரியை மெரில்லா ஜெயந்தி அமுதா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டு பாராட்டு சான்று, பரிசு வழங்கி கவுரவிக்கப்பட்டனர். இதுபோல் சிறந்த ஆசிரியர்களின் புதுமை கற்பித்தலை அங்கீகரிக்கும் வகையில் அவர்களை தேர்வு செய்து, இத்திட்டத்தில் கவுரவிப்பது தொடரும். ஆசிரியர்கள் தங்களை தயார்படுத்திக்கொள்ள வேண்டும் என்றார்.

Advertisement