மரம் வெட்டிய 2 பேருக்கு தலா ரூ.1 லட்சம் அபராதம்

1

கோவை: வெரைட்டி ஹால் ரோடு சி.எம்.சி. காலனியில் சங்கர்லால் என்பவர், வணிக வளாகம் முன்பிருந்த 10 அடி நீளம், 2 அடி சுற்றளவுள்ள புங்கன் மரத்தை வெட்டியுள்ளார்.

புகார் வந்ததால், தெற்கு கோட்டாட்சியர் (ஆர்.டி.ஓ) விசாரித்தார். சங்கர்லாலுக்கு ரூ.1.05 லட்சம் அபராதம் விதித்தார். வெட்டிய மரத்துக்கு ஈடாக தனது சொந்த நிலத்தில் அல்லது மாநகராட்சி இடத்தில் அவர் 10 மரக்கன்று நட்டு பராமரிக்க வேண்டும், என்று உத்தரவிட்டார்.

அபராதம் செலுத்திய ரசீது, மரக்கன்று நட்ட இடங்களின் போட்டோ ஆகியவற்றை தாசில்தார் தாக்கல் செய்ய வேண்டும் என்றார்.

குனியமுத்துாரில் பாலக்காடு மெயின் ரோட்டில் கடை வைத்துள்ள முகமது ரபீக் என்பவர், கடையின் கூரைக்கு மரத்தால் பாதிப்பு ஏற்படுவதாக கூறி, கிளைகளை வெட்ட பேரூர் தாசில்தார் சேகரிடம் அனுமதி பெற்றார். ஆனால், 5 மரங்களின் அனைத்து கிளைகளையும் வெட்டி மொட்டை ஆக்கி விட்டார்.

இவை நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான மரங்கள். அந்த துறையை கேட்காமல், ரபீக்கிற்கு வருவாய் துறை அனுமதி கொடுத்ததே தவறு. இது நமது நாளிதழில் படத்துடன் செய்தியாக வெளியானது.

அதை தொடர்ந்து, ரபீக்கிற்கு தாசில்தார் ரூ.1.04 லட்சம் அபராதம் விதித்தார். வெரைட்டி ஹால் சங்கர்லால் ஒரு மரம் வெட்டியதற்கே ரூ.1.05 லட்சம் அபராதம் விதித்தார் கோட்டாட்சியர். ரபீக் 5 மரம் வெட்டியும் தாசில்தார் கருணையால் குறைந்த அபராதம் செலுத்தினார்.

தாசில்தாரிடமே நமது நிருபர் கேட்டார். ''மரத்தின் மதிப்பு என்னவோ, அதற்கு 15 மடங்கு அதிகமாக அபராதம் விதித்துள்ளேன். வி.ஏ.ஓ. - ஆர்.ஐ. முன்னிலையில் கிளைகளை வெட்டியதாகவும், அவர்கள் போனபிறகு, மரத்தை வெட்டியதாகவும் விசாரணையில் தெரிந்தது. 5 மரம் வெட்டியதற்கு ஈடாக குளக்கரையில் 50 மரக்கன்று நடப்படும்,'' என்றார்.

எனினும், 'கிரீன் கேர்' அமைப்பினர் இதில் சந்தேகம் கிளப்புகின்றனர்.” வி.ஏ.ஓ. - ஆர்.ஐ. முன்னிலையில் கிளைகளை வெட்ட தாசில்தார் அனுமதி அளித்துள்ளார். நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான மரங்களை, அவர்களுக்கு தெரியாமலே வெட்டுவதற்கு அனுமதி அளித்ததே தவறு. இவர்கள் மீது நடவடிக்கை எடுத்தால் மட்டுமே மரங்களை இஷ்டத்துக்கு வெட்டி சாய்ப்பது தடுக்கப்படும்” என்கின்றனர்.

Advertisement