பாரதிதாசன் மகளிர் கல்லுாரியில் கல்லீரல் ஆரோக்கிய விழிப்புணர்வு

புதுச்சேரி: உலக கல்லீரல் அழற்சி தினத்தை முன்னிட்டு, ஜிப்மரில் மருத்துவ இரைப்பை குடலியல் துறை சார்பில், பாரதிதாசன் அரசு மகளிர் கல்லுாரியில் கல்லீரல் ஆரோக்கிய விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

பாரதிதாசன் அரசு மகளிர் கல்லுாரி முதல்வர் மதிவாணன் தலைமை தாங்கினார். முதல் அமர்வில் ஜிப்மர்  பேராசிரியர் செந்தமிழ் செல்வன், கல்லீரலின் முக்கிய செயல்பாடுகள், ஹெபடைடிஸ் பரவும் முறைகள், ஹெபடைடிஸ் பி தடுப்பூசியின் முக்கியத்துவம் மற்றும் ஆரம்பகால பரிசோதனையின் அவசியம் குறித்து பேசினார்.

இரண்டாம் அமர்வில் பேசிய இரைப்பை குடலியல் துறைத் தலைவர் பழனிவேல் மோகன்,  வளர்சிதை மாற்றக் கோளாறுகளால் ஏற்படும் கொழுப்பு கல்லீரல் நோய் அதிகரித்து வருகிறது. இதை தவிர்க்க சமச்சீர் உணவு, சீரான உடற்பயிற்சி மற்றும் உடல் எடையைப் பராமரிக்க வேண்டும்’ என்றார்.

மூன்றாம் அமர்வில், ஜிப்மர் மருத்துவ சமூகப் பணியாளர் ஹெனா மெல்யா பேசுகையில், ‘குடும்பத்தினரிடமும் சமூகத்தினரிடமும் கல்லீரல் ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். இதில்  இளைஞர்களின் பங்கு முக்கியமானது’ என்றார்.

தொடர்ந்து நடந்த கலந்துரையாடலில் கல்லீரல் குறித்த பல்வேறு சந்தேகங்களை நிபுணர்களிடம் மாணவர்கள் எழுப்பி கேட்டுத் தெளிவு பெற்றனர். கல்லீரல் நோய் தடுப்பு குறித்த விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்பட்டன. விலங்கியல் துறை உதவிப் பேராசிரியர் காந்தமணி, மனையியல் துறை உதவிப் பேராசிரியர் மலர்விழி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement