பெண்கள் மீதான அவதுாறு குறித்து நடவடிக்கை த.வெ.க., ஆட்சி மீது சி.வி.சண்முகம் காட்டம்

விழுப்புரம்: ‘பெண்கள் மீதான அவதுாறுகள் குறித்து நடவடிக்கை எடுக்காதது தான், துாய ஆட்சிக்கு அழகா’ என சி.வி.சண்முகம், கேள்வி எழுப்பினார்.விழுப்புரம் எஸ்.பி., அலுவலகத்திற்கு, நேற்று காலை தனது ஆதரவாளர்களுடன் திரண்டு வந்த முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், எஸ்.பி., மதிவாணனை சந்தித்து, கட்சியினர் வழங்கிய அவதுாறு புகார்கள் மீது நடவடிக்கை கோரி பேசினார்.

இதனையடுத்து, அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

விழுப்புரம் மாவட்டத்தில், அரசியல் காழ்ப்புணர்ச்சியால், சமீபகாலமாக சிலர், பெண் நிர்வாகிகள் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது அவதுாறு கருத்துக்களை கூறி, தவறாக சித்தரித்து, ஏ.ஐ., மூலம் ‘மார்பிங்’ செய்து படங்களை வலைதளங்களில் பதிவிட்டு அவமதித்து, அச்சுறுத்தி வருகின்றனர்.

இதனால், பலர் மன உளைச்சலில் உள்ளனர். குறிப்பாக, அ.தி.மு.க., பெண் நிர்வாகியை அவமதித்தது குறித்து, கருத்து தெரிவித்த அவரது மகள் குறித்தும் அவதுாறு பரப்பி வருகின்றனர்.

தரம் தாழ்ந்த அவதுாறுகள் தொடர்கிறது. விழுப்புரம் மாவட்டத்தில், தி.மு.க., –அ.தி.மு.க., ஆட்சி காலங்களில் கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

ஒருபோதும் பெண் நிர்வாகிகளை, அவரது குடும்பத்தினரை அவமதித்து, இப்படி கேவலமான கருத்து மோதல்கள் எழுந்ததில்லை.முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர்., ஜெ., வழிநடத்திய அ.தி.மு.க.,வில் உள்ள பெண்களுக்கு, தற்போது இத்தகைய அவமதிப்புகள் நடக்கிறது. இதுதான் பழனிசாமி கட்சி நடத்தும் லட்சணமா? இந்த அவதுாறுகளை பழனிசாமி ரசித்துக்கொண்டுள்ளார். பெண்கள் பொது வாழ்க்கைக்கு வர அச்சப்படுவார்கள்.இதனையெல்லாம் மக்களும், கட்சியினரும் பார்த்துக்கொண்டுள்ளனர். ஆனால், தமிழக அரசும், போலீஸ் துறையும் வேடிக்கை பார்க்கலாமா?

தமிழகத்தில் மாற்றத்தை வழங்க வந்துள்ள த.வெ.க., அரசும், பெண்கள் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிப்பதாக கூறும் முதல்வரும் நடவடிக்கை எடுக்கவில்லை.

ஆட்சி மாறியும், காட்சி மாறவில்லை. விழுப்புரம் போலீஸ்துறை மாறவில்லை, போலீசார் திருந்த வேண்டும். மாவட்டத்தில் பல புகார்கள் கொடுத்தும் நடவடிக்கை இல்லை.இந்த புகார்கள் குறித்து, இன்று விழுப்புரம் எஸ்.பி.,யை சந்தித்து பேசினேன். அவர் அளித்த அவலமான விளக்கம் அதிர்ச்சியளிக்கிறது. 7 ஆண்டுக்கு கீழ் தண்டனை பெறும் குற்ற புகார்கள் குறித்து, விசாரித்து தான் சி.எஸ்.ஆர்., கொடுப்போம், அரசு சட்ட வல்லுனரிடம் ஆலோசித்து வழக்கு போடுவோம், தேவை ஏற்பட்டால் தான் கைது செய்வோம், குற்றச்சாட்டு பதிவோம் என்கிறார்.

இது, 7 ஆண்டு தண்டனைக்கு கீழ் தவறு செய்பவர்கள், இனி அச்சமின்றி திரியலாம், என எஸ்.பி., உத்தரவாதம் அளிப்பதுபோல் உள்ளது.

இப்படி ஒரு காவல் அதிகாரியை நியமித்த முதல்வரை பாராட்டலாம். இதுதான் முதல்வர் வழங்கும் துாய்மையான ஆட்சியா.. பெண்கள் மீதான அநீதிக்கு நியாயம் வழங்க வேண்டும்.

இவ்வாறு சண்முகம் தெரிவித்தார்.

முன்னாள் அ.தி.மு.க., நிர்வாகிகள் சங்கர், சுரேஷ்பாபு, ராமதாஸ், கண்ணன், முத்தமிழ்செல்வன், நடராஜன், வெங்கடேசன், ராதிகா செந்தில், ஜெயபிரகாஷ், குமரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

 

Advertisement