தமிழகத்தில் அரிசி விலை உயர்வா? அரிசி ஆலை உரிமையாளர்கள் சங்கத்தினர் சொல்வது இதுதான்!
சென்னை: பிற மாநிலங்களில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மிக சன்ன ரக அரிசியின் விலை மட்டுமே உயர்ந்துள்ளதாகவும், இந்த விலை உயர்வு தற்காலிகமானது என்றும் தமிழ்நாடு அரிசி ஆலை உரிமையாளர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
அரிசி ஆலை உரிமையாளர்கள் சங்கத்தினர் கூறியதாவது; கடந்த சில தினங்களாகவே அரிசியின் விலை சற்று உயர்ந்திருப்பதாகவும், தட்டுப்பாடும் ஏற்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகி வந்தன. அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு விடும் என்ற செய்தி முற்றிலும் தவறானது. கடந்த ஆண்டு இந்திய அளவில் 150 மில்லியன் மெட்ரிக் டன் அரிசி உற்பத்தி செய்து நமது விவசாயிகள் சாதனை புரிந்துள்ளனர். அதிலும், குறிப்பாக, 40 சதவீதம் உலக மக்களின் தேவையை பூர்த்தி செய்வதற்காக ஏற்றுமதி செய்யும் அளவுக்கு இந்தியா உயர்ந்துள்ளது. கடந்த சில ஆண்டுகளாக ஏற்றுமதியில் நான்காம் இடத்தில் இருந்த இந்தியா, கடந்தாண்டு முதன்மை நாடாக மாறியுள்ளது. உற்பத்தியைப் பொறுத்தவரையில் அரிசி நிறைய இருக்கிறது. தட்டுப்பாடு என்ற பேச்சுக்கே இடமில்லை.
தமிழகத்தைப் பொறுத்தவரையில் நமது மாநிலத்தில், ஆண்டுக்கு 7.5 கோடி மக்களுக்கு 91 லட்சம் மெட்ரிக் டன் அரிசி தேவைப்படுகிறது. ஆனால், இந்திய விவசாயிகள் உற்பத்தி செய்வது 72 லட்சம் மெட்ரிக் டன் முதல் 75 லட்சம் மெட்ரிக் டன் வரையில் தான் அரிசி உற்பத்தி செய்யப்படுகிறது. தமிழகத்தைப் பொறுத்தவரையில், கடந்த 10 முதல் 15 ஆண்டுகளில் பற்றாக்குறை மாநிலம் தான். பிற மாநிலங்களில் அரிசி மற்றும் நெல்லாக வரப்படுகிறது. இங்கு 30 லட்சம் மெட்ரிக் டன் அரிசி வருவதால் எந்தவொரு தட்டுப்பாடும் இல்லாமல், தமிழக மக்களின் தேவையை பூர்த்தி செய்து வருகிறோம்.
தமிழகத்தில் நாம் 3 ரகமான அரிசியை பயன்படுத்தி வருகிறோம். மோட்டா ரகம், சன்ன ரகம், மிகச்சன்ன ரகம். தமிழகத்தில் அதிகமாக விளைவிக்கக் கூடியது மோட்டா ரகமும், சன்ன ரகமும் தான். மோட்டா ரகத்தில் அம்பை 16, சிஆர்1009, டிகேஎம்9 போன்ற ரகங்கள் இடம்பெறுகின்றன. சன்ன ரகத்தில் ஏடிடி36, ஏடிடி47, ஐஆர்20 போன்றவை இடம்பெறுகின்றன. பிபிடி எனப்படும் பாபட்லா பொன்னி, சோனா மசூரி ஆகியவை மிகச்சன்ன ரக அரிசிகளாகும்.
இந்த சின்ன ரக அரிசிகள் பெருமளவில் தமிழகத்திற்கு உற்பத்தி செய்யப்படுவதில்லை. காலநிலை, இயற்கை நதிகள் இல்லை என்பதால் அதிகமாக உற்பத்தி செய்யப்படுவதில்லை. மண்ணச்சநல்லூர், ஆடுதுறை போன்ற ஒருசில இடங்களில் நமது விவசாயிகள் அறுவடை செய்திருந்தாலும், பிற மாநிலங்களில் இருந்து வரவழைத்தே, நமது மாநில மக்களின் தேவைகளை பூர்த்தி செய்கிறோம். மொத்தம் இறக்குமதி செய்யப்படும் 30 லட்சம் மெட்ரிக் டன்னில், மிகச்சன்ன ரக அரிசி மட்டும் 20 லட்சம் மெட்ரிக் டன்னாகும்.
தமிழகத்தில் தற்போது மிகச்சன்ன ரக அரிசியின் விலை மட்டுமே ஏற்றம் செய்யப்பட்டிருப்பதை மக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். தமிழக மக்கள் அதிகம் விரும்பி வாங்குவது மிக சன்ன ரக அரிசியைத் தான். மோட்டா ரகம், சன்ன ரகம் அரிசிகள் விலை ஏறவில்லை. ஆந்திரா, கர்நாடகாவில் இருந்து மிகச்சன்ன ரக அரிசிகளை பெற்று வருகிறோம். தற்போது மழை இல்லாத காரணத்தால் அங்கு விளைச்சல் குறைந்துள்ளது. இதன் காரணமாகவே விலை உயர்வு பெற்றுள்ளது.
சீசன் அல்லாத போது அரிசியின் விலை உயர்வதும், அறுவடை காலங்களில் விலை குறைவதும், கடந்த 10 அல்லது 15 ஆண்டுகளில் வழக்கமாக நிகழ்வதுதான். தமிழகத்தில் தற்போது ஏற்பட்டுள்ள விலை உயர்வு தற்காலிகமானது. மாதாமாதம் விலை உயராது. 25 கிலோ அல்லது அதற்கு குறைவான எடையுள்ள அரிசி மூட்டைகளுக்கு தான் ஜிஎஸ்டி வசூலிக்கப்படுகிறது. ஏழை, எளிய மக்கள் 5 கிலோ முதல் 25 கிலோ வரையுள்ள அரிசி மூட்டைகளை வாங்குகின்றனர். அரிசிக்கான ஜிஎஸ்டி வரியை நீக்குமாறு மத்திய அரசுக்கு முதல்வர் விஜய் வலியுறுத்த வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
மேலும்
-
மடப்புரம் கோயில் வழியாக சென்றாலும் பார்க்கிங் கட்டணம்
-
பாதிப்பு 73 ஏரிகள் முற்றிலும் வறண்டதால் பாசன பணிகள்... வரலாறு காணாத அளவில் குறைந்த பருவமழை
-
நீர் மின் நிலையங்களில் உற்பத்தி இல்லை கை கொடுக்கும் காற்றாலை, சோலார் மின்சாரம்
-
திருநங்கைகளுக்கு குறைகேட்பு கூட்டம்
-
சுற்றுலா மேம்பாடு, ஐ.டி., பூங்கா ஏற்படுத்தி வளர்ச்சிக்கு திட்டமிடுங்க! அரசுக்கு தொழில்வர்த்தக சபை வலியுறுத்தல்
-
முதல்வருடன் ‘போசியா’ சந்திப்பு