அரசு மருத்துவமனை இரு வளாகங்களுக்கு இடையேஇணைப்பு பாலம்: குழந்தைகள் நல வார்டு 3 மாதங்களில் முடியும்
மதுரை: மதுரை அரசு மருத்துவமனையில் புதிதாக கட்டப்பட்டு வரும் குழந்தைகள் நலப்பிரிவு கட்டடத்துடன் அருகிலுள்ள பல்நோக்கு சிறப்பு மருத்துவமனை (எஸ்.எஸ்.பி.,) இணைக்கும் வகையில் பாலம் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது.
அரசு மருத்துவமனை பழைய வளாகத்தில் 180 படுக்கைகள், 13 ஐ.சி.யு., படுக்கைகள், 24 ஆக்சிஜன் படுக்கைகளுடன் குழந்தைகள் நல வார்டு செயல்படுகிறது. கீழ்த்தளத்தில் மருத்துவ சிகிச்சை பிரிவும் மேல் தளத்தில் அறுவை சிகிச்சை பிரிவும் உள்ளது. இடநெருக்கடியாக இருப்பதால் மதுரை அரசு மருத்துவக் கல்லுாரி, எஸ்.எஸ்.பி., வளாகத்தையொட்டி உள்ள இடத்தில் ரூ.43 கோடியில் ஐந்து தளங்களுடன் கூடிய குழந்தைகள் நல வார்டுக்கான கட்டடம் கட்டப்படுகிறது. ஆரம்பத்தில் மருத்துவ பிரிவு, அறுவை சிகிச்சை பிரிவு இரண்டுமே மாற்ற உள்ளதாக கூறப்பட்ட நிலையில் தற்போது மருத்துவப் பிரிவு மட்டுமே இங்கு மாற்றப்படுகிறது.
டீன் அருள் சுந்தரேஷ்குமார் கூறியதாவது: 2023 ல் பணிகள் தொடங்கிய நிலையில் இன்னும் 3 மாதங்களுக்குள் கட்டடம் எங்களிடம் ஒப்படைக்கப்படும். பழைய வளாகத்தில் மகப்பேறு வார்டு, குழந்தைகள் நல அறுவை சிகிச்சை பிரிவு உள்ளது. பிறக்கும் பச்சிளம் குழந்தைகளுக்கு அவசர அறுவை சிகிச்சை செய்வதற்கு இங்கு தான் வசதிப்படும். பச்சிளம் குழந்தை, தாயை வெவ்வேறு இடங்களுக்கு மாற்றமுடியாது. எனவே புதிய வளாகத்தில் 12 வயது வரையான குழந்தைகளின் மருத்துவ சிகிச்சை வார்டு மட்டுமே மாற்றப்படும். இங்கு 225 படுக்கைகளுடன் கட்டப்பட்டு வருகிறது. மேலும் எஸ்.எஸ்.பி., வளாகத்தின் இரண்டாவது தளத்துடன் புதிய குழந்தைகள் நல வளாகத்தை இணைக்கும் பாலம் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. அங்கு கட்டண வார்டு உள்ளதால் தேவைப்படுவோர் பயன்படுத்திக் கொள்ளலாம்.
முதலில் புறநோயாளிகள் வார்டு மட்டும் புதிய வளாகத்திற்கு மாற்றப்பட்டு அதன்பின் உள்நோயாளிகள் வார்டுக்கு நோயாளிகள் மாற்றப்படுவர். பழைய வளாக வார்டு காலியானதும் புற்றுநோயாளிகளுக்கான மருத்துவ சிகிச்சை பிரிவு, உள்நோயாளிகளுடன் கூடிய வார்டாக மாற்றப்படும் என்றார்.
மேலும்
-
சிறையில் கணவர்; விபத்தில் மனைவி பலி குழந்தை தவிப்பால் நிவாரணம் கேட்டு மறியல்
-
31 பேர் அரசு பணி ரத்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு
-
இரவில் சாயக்கழிவுநீரை வெளியேற்றும் ஆலைகள் மீது நடவடிக்கை எப்போது?
-
செயல் அலுவலரை கண்டித்து ஆர்ப்பாட்டம்
-
தமிழ்நாடு கரும்பு வெட்டும் தொழிலாளர் சங்க 2வது மாநாடு
-
மண் எடுக்க மறுப்பு விவசாயிகள் அதிருப்தி