வடமதுரை பெருமாள் கோயிலில் தேரோட்டம்

வடமதுரை, ஜூலை 30-

வடமதுரை சவுந்தரராஜப் பெருமாள் கோயில் ஆடித்திருவிழாவில் நேற்று மாலை தேரோட்டம் நடந்தது.

இக்கோயிலில் ஜூலை 21ல் கொடியேற்றத்துடன் துவங்கிய 13 நாள் ஆடித்திருவிழா ஆக., 2 வரை நடக்கிறது. நாள்தோறும் இரவு பல்வேறு வாகனங்களில் சுவாமி புறப்பாடு, மண்டகப்படிதாரர் சிறப்பு வழிபாடுகள் நடக்கின்றன. ஜூலை 27 இரவு சவுந்தரவல்லி தாயார் சன்னதியில் திருக்கல்யாணம் நடந்தது.

திருவிழாவின் சிறப்பு நிகழ்வான தேரோட்டம் நேற்று மாலை நடந்தது. முன்னதாக காலையில் கோயில் வளாகத்தில் சுதர்ஷண ஹோமம், மதுரை அழகர்மலையில் இருந்து கொண்டு வரப்பட்ட தீர்த்தம் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடந்தது.

சன்னதியில் இருந்து ஊர் பிரமுகர்கள் அழைத்துவர ரத்தனங்கி அலங்காரத்தில் ஸ்ரீதேவி, பூமாதேவியுடன் சவுந்தரராஜப்பெருமாள் தேரில் எழுந்தருளினார். மாலை 5:08 மணிக்கு பக்தர்கள் கரகோஷத்துடன் வடம் பிடித்து இழுக்க தேரோட்டம் துவங்கி திண்டுக்கல் ரோடு, மேற்கு, வடக்கு ரத வீதிகள், திருச்சி ரோடு வழியே நகரை வலம் வந்தது.

பேரூராட்சி தலைவர் நிருபாராணி கணேசன், துணைத்தலைவர் மலைச்சாமி, செயல் அலுவலர் பத்மலதா, தி.மு.க., ஒன்றிய செயலாளர்கள் சுப்பையன், பாண்டி, நகர செயலாளர் கணேசன், த.வெ.க., பிரமுகர் சக்திகணேசன், ஆயிரக்கணக்கில் சுற்றுவட்டார பக்தர்கள் பங்கேற்றனர்.

Advertisement