பிரிவு சாலையில் பேனர் விபத்து ஏற்படும் அபாயம்
கரூர்: கரூர் பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே, தின்னப்பா கார்னர் பிரிவு சாலையில் வைக்கப்பட்டுள்ள விளம்பர பேனரால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.
கரூர் மாநகராட்சி பகுதியில் சாலையோரங்கள் மற்றும் தனியார் கட்டடங்களில் வைக்கப்படும் விளம்பர பேனர்களால், பொதுமக்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் சூழல் உருவானது. கடந்த காலங்களில், கட்சிக்காரர்கள் வைத்த பேனர் சரிந்து விழுந்த விபத்துகளில், அப்பாவிகள் உயிரிழந்த சம்பவம் நடந்தது. நீதிமன்றம் விதித்த தடை உத்தரவுகளுக்கு பின், அரசியல் கட்சிகள் பேனர்கள் வைப்பதை குறைத்து கொண்டன. ஆனால், தனியார் நிறுவனங்கள் சார்பில் பல்வேறு இடங்களில் ஆபத்தான நிலையில் பிளக்ஸ் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன.
கரூரில் தனியார் நிறுவனங்கள், ரசிகர் மன்றத்தினர் பிளக்ஸ் பேனர்கள் வைப்பது மீண்டும் அதிகரித்து உள்ளது. கரூர் பழைய பஸ் ஸ்டாண்ட் ரவுண்டானா, தின்னப்பா கார்னர் மற்றும் லைட் ஹவுஸ் கார்னர் ரவுண்டானா ஆகிய இடங்களில் விளம்பர பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. பல பேனர்கள் போதிய பிடிமானம் இன்றி, மின் கம்பத்தில் கட்டி வைக்கப்பட்டுள்ளது.
அதில் தின்னப்பா கார்னர் பிரிவு சாலையில் வைக்கப்பட்டுள்ள பேனரால், மற்றொருபுறம் சாலையிருந்து வரும் வாகனங்கள் வருவதை பார்க்க முடியவில்லை. அதனால், சில நேரங்களில் வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்தில் சிக்குகின்றன. தற்போது பலத்த காற்று வீசுவதால் பேனர்கள் கீழே விழும் ஆபத்து உள்ளது. போக்குவரத்துக்கு இடையூறாக, பிளக்ஸ் பேனர்கள் வைப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க
வேண்டும்.