வி.விருப்பம் டி.ஜே. நினைவு போட்டோ போட்டி வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு
கோவை, ஜூலை 31–
எல்.எம்.டபிள்யூ. நிறுவனத்தின் முன்னாள் தலைவர் ஜெயவர்த்தனவேலு நினைவாக டி.ஜே. நினைவு சர்வதேச புகைப்பட போட்டி ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. இந்தாண்டு நடந்த 15வது பதிப்பு போட்டிக்கு www.djmpc.in என்ற இணையதளத்தில் ஆர்வமுடன் பலர் பதிவு செய்தனர்.
இந்தியாவின் ராகுல் சச்தேவ், கல்யாண் வர்மா மற்றும் கென்யாவின் அந்தோனி ஓச்சியெங் ஒன்யாங்கோ உள்ளிட்ட புகைப்பட கலைஞர்கள் அடங்கிய நடுவர் குழு புகைப்படங்களை மதிப்பீடு செய்தது. மருதாச்சலம் போட்டி ஆலோசகராகவும், விக்ரம் சத்யநாதன் போட்டி நிர்வாகியாகவும் செயல்பட்டனர்.
வனவிலங்குகள், இயற்கை காட்சிகள், வான்வழி பார்வை ஆகிய பிரிவுகளில் 37 நாடுகளை சேர்ந்த 2,334 பேரிடம் 12,278 புகைப்படங்கள் பெறப்பட்டன. ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு பரிசுகள் மட்டுமின்றி, சிறந்த 10 பங்கேற்பாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
எல்.எம்.டபிள்யூ. நிறுவன தலைவர் சஞ்சய் ஜெயவர்த்தனவேலு வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் ரூ.12 லட்சம் மதிப்பிலான பரிசு தொகையை வழங்கினார். தேர்வு செய்யப்பட்ட புகைப்படங்கள் கஸ்துாரி சீனிவாசன் கலாசார மையத்தில் ஆக. 5 வரை நடக்கும் கண்காட்சியில் இடம் பெறுகின்றன.