கூட்டுறவு சார்பதிவாளர் சஸ்பெண்ட் உத்தரவு ரத்து செய்யக்கோரி காத்திருப்பு போராட்டம்

ராமநாதபுரம்: கமுதி வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க சார்பதிவாளர் வேல்முருகனை தற்காலிக பணிநீக்கம் செய்ததை ரத்து செய்ய வலியுறுத்தி ராமநாதபுரம் கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு கூட்டுறவுத்துறை ஊழியர் சங்கத்தினர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சங்க மாவட்ட தலைவர் விஜயராமலிங்கம் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் மணிகண்டன் முன்னிலை வகித்தார். இதில், கமுதி வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் சம்பா மிளகாய் கொள்முதலில் தரமற்ற மிளகாய் இருந்ததை கண்காணிக்க தவறியதாகக் கூறி இதற்கு சம்பந்தமில்லாத சார்பதிவாளர் வேல்முருகன் ஜூலை 29 ல் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

இந்த கொள்முதல் சமயத்தில் அவர் விடுமுறையில் இருந்த போதும் சஸ்பெண்ட் செய்துள்ளதை கண்டிக்கிறோம். எனவே தற்காலிக பணி நீக்க நடவடிக்கையை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தினர். மாலை 5:00 மணி வரை இணைப்பதிவாளர் அலுவலகம் முன்பு காத்திருந்தனர். அதன் பிறகு கோரிக்கையை வலியுறுத்தி கோஷமிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர். சங்க நிர்வாகிகள், அலுவலர்கள் பங்கேற்றனர்.------

Advertisement