பழம்பெரும் பாடகி ஜமுனா ராணி காலமானார்

12


-நமது நிருபர்-



தென்னிந்தியத் திரையுலகத்தின் பழம்பெரும் பாடகியான ஜமுனா ராணி நேற்று (ஜூலை 30) பெங்களூருவில் காலமானார். அவருக்கு வயது 88. அவரது இறுதிச் சடங்கு நேற்று கல்லஹள்ளி என்ற இடத்தில் நடந்தது.

திரையிசை பயணம்

தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் 6000 பாடல்களுக்கு மேல் பாடியிருக்கிறார். 1938ம் ஆண்டு ஆந்திர மாநிலத்தில் பிறந்த ஜமுனா ராணி அவரது 7வது வயதில் 'தியாகய்யா' என்ற படத்தின் மூலம் திரையுலகில் பாடகியாக நுழைந்தார்.

குழந்தைத் தனமான குரலுக்கு சொந்தக்காரரான ஜமுனா தமிழில் 1952ல் தமிழில் மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனத்தினர் தயாரிப்பில் வெளிவந்த "கல்யாணி" என்ற திரைப்படத்தில் இரண்டு பாடல்கள் பாடினார். "சக்ஸஸ்" என்று ஒரு பாட்டும், "ஒன் டூ த்ரீ என்று ஒரு பாட்டும் இவருடைய குரலில் பதிவானது.

இந்த இரண்டு பாடல்களும் இவருக்கு நல்ல பெயரையும் பெற்றுத் தந்தது. அதன்பின் "மகாதேவி" திரைப்படத்தில் சாவித்ரிக்காக இவர் பின்னணி பாடிய "காமுகர் நெஞ்சில் நீதியில்லை" என்ற பாடல் இவருக்கு திரையிசைப் பயணத்தில் ஒரு திருப்பத்தை தந்தது என்றே சொல்லலாம்.

சூப்பர் ஹிட் பாடல்கள்


“காளை வயசு கட்டான சைசு..., செந்தமிழ் தேன் மொழியாள்..., பாட்டொன்று கேட்டேன்..., காட்டில் மரம்..., சின்னச் சின்ன சிட்டு..., காவேரி தாயே..., உங்க மனசு ஒரு தினுசு..., தாரா தாரா வந்தாரா..., எந்த நாளும் சந்தோஷமே..., யாரடி நீ மோகினி..., குங்குமப்பூவே கொஞ்சும் புறாவே..., மாமா மாமா..., ஆசையும் என் நேசமும்...,” என அந்தக் காலத்தில் பல சூப்பர் ஹிட் பாடல்களைப் பாடியவர்.

மணிரத்னம் இயக்கத்தில் இளையராஜா இசையில் 'நாயகன்' படத்தில் இடம் பெற்ற 'நான் சிரித்தால் தீபாவளி' பாடலைப் பாடியவர். இன்றைய தலைமுறைக்கு இந்தப் பாடலைப் பற்றிச் சொன்னால்தான் தெரியும்.

ஜாம்பவான் இசையமைப்பாளர்கள், பாடகர்கள்

ஜி ராமநாதன். கேவி மகாதேவன், எஸ் தக்ஷிணா மூர்த்தி, ஏஎம் ராஜா, பெண்டியாலா நாகேஸ்வரராவ், டி சலபதிராவ், டிஜி லிங்கப்பா, எஸ்வி வெங்கட்ராமன், எஸ்எம் சுப்பையா நாயுடு, விஸ்வநாதன் ராமமூர்த்தி, எஸ் ராஜேஸ்வரராவ், ஜிகே வெங்கடேஷ், டிஆர் பாப்பா, வி குமார், இளையராஜா என்று அனைத்து இசை ஜாம்பவான்களிடமும் பணியாற்றிய பெருமைமிக்கவர்.

டிஎம் சவுந்தரராஜன், பிபி ஸ்ரீனிவாஸ், ஏஎம் ராஜா, சீர்காழி கோவிந்தராஜன், திருச்சி லோகனாதன், ஜேபி சந்திரபாபு, ஏஎல் ராகவன், எஸ்சி கிருஷ்ணன், பி சுசிலா, பி லீலா, எல்ஆர் ஈஸ்வரி, ஜிக்கி, ஏபி கோமளா, ஏஜி ரத்னமாலா, எஸ் ஜானகி, எம்எல் வசந்தகுமாரி, டிவி ரத்னம், கே ராணி, எம்எஸ் ராஜேஸ்வரி மற்றும் சூலமங்கலம் ராஜலட்சுமி என அனைத்து முன்னணி பாடகர்களுடனும் பல பாடல்கள் இணைந்து பாடி ரசிகர்கள் நெஞ்சில் நீங்கா இடம் பிடித்தவர்.

பயோடேட்டா

இயற்பெயர் : கே ஜமுனா ராணி

சினிமா பெயர் : கே ஜமுனா ராணி

பிறப்பு : 17-மே-1938

இறப்பு : 30, ஜூலை 2026

பிறந்த இடம் : ஆந்திர மாநிலம்

பெற்றோர் : கே வரதராஜுலு - கே திரௌபதி

விருதுகள்




* 1998ம் ஆண்டு தமிழக அரசால் "கலைமாமணி விருது" வழங்கப்பட்டது.
* 2002ம் ஆண்டு கவுரவ விருதான "அறிஞர் அண்ணாதுரை விருது" தமிழக அரசால் வழங்கப்பட்டது.

கே ஜமுனா ராணியின் குரலில் சில முத்தான திரைப்பாடல்கள்

1. ஆசையும் என் நேசமும் ரத்த பாசத்தினால் - குலேபகாவலி

2. காமுகர் நெஞ்சில் நீதியில்லை - மகாதேவி

3. மேலே பறக்கும் ராக்கெட்டு - அன்பு எங்கே

4. பூவில் வண்டு போதை கொண்டு - அன்பு எங்கே

5. அதிமதுரா அனுராகா - எங்கள் குடும்பம் பெருசு

6. செந்தமிழ் தேன் மொழியாள் - மாலையிட்ட மங்கை

7. தடுக்காதே என்னை தடுக்காதே - நாடோடி மன்னன்

8. வீணான ஜம்பம் ஏனடி - சபாஷ் மீனா

9. சொல்லட்டுமா சொல்லட்டுமா - தை பிறந்தால் வழி பிறக்கும்

10. யாரடி நீ மோகினி - உத்தம புத்திரன்

11. ஆட்டத்திலே பலவகை உண்டு - பாகப்பிரிவினை

12. அக்காளுக்கு வளைகாப்பு - கல்யாணப் பரிசு

13. என்னை அறியாமலே எனதுள்ளம் கவர்ந்தாயே - மனைவியே மனிதனின்
மாணிக்கம்

14. குங்குமப் பூவே கொஞ்சுப் புறாவே - மரகதம்

15. கண்பாடும் பொன் வண்ணமே - சகோதரி

16. இந்த ஜகமே என் கையிலே - பாக்தாத் திருடன்

17. தாரா தாரா வந்தாரா - தெய்வப்பிறவி

18. காளை வயசு கட்டான சைசு - தெய்வப்பிறவி

19. இவர் கானா இவர் பானா - தெய்வப்பிறவி

20. நீயோ நானோ யார் நிலவே - மன்னாதி மன்னன்

21. பக்கத்திலே கன்னிப் பெண்ணிருக்கு - படிக்காத மேதை

22. பார்த்தீரா அய்யா பார்த்தீரா - பாக்கியலக்ஷ்மி

23. மாமா மாமா மாமா ஏம்மா ஏம்மா ஏம்மா - குமுதம்

24. பாட்டொன்று கேட்டேன் - பாசமலர்

25. படிக்க வேண்டும் புதிய பாடம் - தாயில்லாப் பிள்ளை

26. ஆதி மனிதன் காதலுக்குப் பின் - பலே பாண்டியா

27. அத்திக்காய் காய் காய் - பலே பாண்டியா

28. சித்திரத்தில் பெண்ணெழுதி - ராணி சம்யுக்தா

29. தாங்காதம்மா தாங்காது சம்சாரம் தாங்காது - செந்தாமரை

30. கொஞ்சம் தள்ளிக்கணும் - கடவுளைக் கண்டேன்

31. பாலாற்றில் சேலாடுது - கொடுத்து வைத்தவள்

32. உனக்காகவா நான் உனக்காகவா - செல்வம்

33. டூயட்டு டூயட்டு டூயட்டு பாடிடும் முதலிரவு - பாலாடை

34. வாழைத் தண்டு போலே உடம்பு அலேக் - பணமா பாசமா

35. புன்னகை மன்னன் பூவிழிக் கண்ணன் - இரு கோடுகள்

36. நான் சிரித்தால் தீபாவளி - நாயகன்

சமீபத்தில் தான் பழம்பெரும் பாடகி ஜானகி காலமானார். அவர் இறந்த இரண்டு வாரங்களுக்குள் ஜமுனா ராணி மறைவு தென்னிந்திய திரையுலகத்திற்கு பேரிழப்பாகும்.

Advertisement