முதல்வர் ரங்கசாமிக்கு முகுல் வாஸ்னிக் நன்றி 

புதுச்சேரி: புதுச்சேரிக்கு வருகை தந்த பார்லிமெண்ட் நிலை குழுவிற்கு சிறப்பான விருந்தோம்பல் அளித்தற்காக, அக்குழுவின் தலைவர் முகுல் வாஸ்னிக் நன்றி தெரிவித்துள்ளார்.

புதுச்சேரியில் அண்மையில் முகுல் வாஸ்னிக் தலைமையிலான பார்லிமெண்ட் நிலைக் குழு ஆய்வுப் பயணம் மேற்கொண்டது. அப்போது கல்வி, பெண்கள், குழந்தைகள், இளைஞர் மற்றும் விளையாட்டு தொடர்பாக ஆய்வு நடத்தியது.

இதற்கிடையில் பார்லிமெண்ட் நிலைக்குழு உறுப்பினர்களுக்கு சிறப்பான வரவேற்பும் விருந்தோம்பலும் அளித்ததற்காக முதல்வர் ரங்கசாமிக்கு பார்லிமெண்ட் நிலைக்குழுத் தலைவர் முகுல் வாஸ்னிக் நன்றி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் முதல்வர் ரங்கசாமிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், ‘நிலைக்குழுவின் ஆய்வுப் பயணத்தின் போது புதுச்சேரி அரசு வழங்கிய ஆதரவிற்கும், முதல்வர் அளித்த சிறப்பான வரவேற்பு மற்றும் இரவு விருந்திற்கும் குழு உறுப்பினர்கள் சார்பில், நன்றி தெரிவித்து கொள்கின்றேன்.

இந்த உபசரிப்பு புதுச்சேரியின் தனித்துவமான கலாசார பாரம்பரியம் மற்றும் பாரம்பரியத்தைப் புரிந்து கொள்ள நிலைக்குழு உறுப்பினர்களுக்கு ஒரு சிறந்த வாய்ப்பாக அமைந்தது. புதுச்சேரி அரசின் பல்வேறு துறைகள் மற்றும் நிறுவனங்களுடனான கலந்துரையாடல்கள் மிகவும் பயனுள்ளதாக இருந்தன. இவை பார்லிமெண்ட் குழுவின் ஆலோசனைகளுக்குப் பெரிதும் உதவும்.

புதுச்சேரி மக்களுக்கு சேவை செய்யும் முதல்வர் ரங்கசாமி சேவை தொடரவும், அவர் நல்ல ஆரோக்கியத்துடன் வாழவும் நிலைக்குழு சார்பில், வாழ்த்துகள்’ என, கூறப்பட்டுள்ளது.

Advertisement