அமெரிக்கா தொடர்ந்து அச்சுறுத்தும் வரை ஹார்முஸ் ஜலசந்தியை திறக்க முடியாது; ஈரான் திட்டவட்டம்

5

டெஹ்ரான்: ஈரானின் இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படை ஹார்முஸ் ஜலசந்தி எங்களது கட்டுப்பாட்டில் உள்ளது; அமெரிக்கா மத்திய கிழக்கு நாட்டைத் தொடர்ந்து அச்சுறுத்தும் வரை அந்த முக்கிய ஜலசந்தியை மீண்டும் திறக்க முடியாது என திட்டவட்டமாக தெரிவித்தது.

மேற்காசிய நாடான ஈரான் மீது அமெரிக்கா தொடர்ந்துள்ள போர், நான்கு மாதங்களை தாண்டியும் தொடர்கிறது. போர் நிறுத்தம், அமைதி ஒப்பந்தம், பேச்சு என பல முயற்சிகள் நடந்தபோதும், இரு தரப்பும் மாறி மாறி தாக்கி வருகின்றன. இந்த போரின் முக்கிய புள்ளியாக விளங்குவது, ஈரான் மற்றும் ஓமனை ஒட்டியுள்ள ஹார்முஸ் ஜலசந்தி. உலக அளவிலான கடல்சார் கச்சா எண்ணெய் போக்குவரத்தில், 20 சதவீதம் இந்த பாதையிலேயே நடக்கிறது.

கடந்த வாரம் முழுவதும் நடந்த தாக்குதலை தொடர்ந்து, ஹார்முஸ் ஜலசந்தி தங்களது கட்டுப்பாட்டில் இருப்பதாக அமெரிக்காவும், ஈரானும் தனித்தனியாக பிரகடனப்படுத்தி உள்ளன. தற்போது அமெரிக்கா தொடர்ந்து அச்சுறுத்தும் வரை ஹார்முஸ் ஜலசந்தியை திறக்க முடியாது என ஈரான் தெரிவித்துள்ளது. மேலும் கூறியதாவது: ஹார்முஸ் ஜலசந்தி வழியாகக் கப்பல்கள் செல்வது தொடர்பான முடிவு ஈரானிடமே உள்ளது.

அதேவேளையில், அமெரிக்காவிற்கு உதவும் நாடுகள் தங்கள் நடத்தையைத் திருத்திக் கொள்ளாவிட்டால் கடுமையான பதிலடி கொடுக்கப்படும். ஹார்முஸ் ஜலசந்தி எங்கள் நிலம். ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் தொலைவிலிருந்து வந்த ஒரு அந்நியர் தலையிட அனுமதிக்கப்பட மாட்டார். சர்வவல்லமையுள்ள இறைவனின் உதவியுடன், ஆக்கிரமிப்பு செய்தவர் இன்று தண்டிக்கப்படுவார்.

அமெரிக்க அதிகாரிகளின் மிகைப்படுத்தல்களும், அச்சுறுத்தல்களும், பிராந்தியத்தில் கடல்வழிப் போக்குவரத்தில் அவர்களின் தலையீடும் தொடரும் வரை ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறக்க முடியாது. மேலும், அச்சுறுத்தல்களும் தலையீடுகளும் நிலைமையை மேலும் கடினமாகவும் சிக்கலாகவும் மட்டுமே ஆக்கும். இவ்வாறு ஈரானின் இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது.

Advertisement