இறந்த மகனின் கடைசி ஆசையை முதல்வரிடம் தெரிவிக்க வேண்டும்
விழுப்புரம்: விஜய் முதல்வராக வேண்டும் என்ற தனது மகனின் கடைசி ஆசை நிறைவேறியுள்ளதாக, விழுப்புரம் விழாவிற்கு வந்த அமைச்சரிடம், கண்ணீர் மல்க பெண் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது.
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அடுத்த தொரவி கிராமத்தில், அரசு நடுநிலைப் பள்ளியில் புதிதாக கட்டப்பட்ட கூடுதல் வகுப்பறை கட்டடத்தை, அமைச்சர் ஆனந்த் நேற்று திறந்து வைத்தார். அப்போது, அந்நிகழ்ச்சிக்கு வந்திருந்த வளவனுாரைச் சேர்ந்த சரண்யா என்பவர், அமைச்சரை சந்தித்து கண்ணீர் மல்க கோரிக்கை வைத்தார்.
அப்போது, எனது மகன் நான்கு மாதங்களுக்கு முன் இறந்துவிட்டார். இறப்பதற்கு முனபு, தமிழக முதல்வராக விஜய் வரவேண்டும் என, அடிக்கடி கூறி வந்தார். என் மகனின் கடைசி ஆசை நிறைவேறி, விஜய் முதல்வராகியுள்ளார். முதல்வர் விஜயிடம், எனது மகனின் கடைசி ஆசை நிறைவேறி உள்ளதை, நீங்கள் (அமைச்சர்) தெரியபடுத்துங்கள் என கண்ணீர் மல்க கூறினார். மேலும், தனக்கு உதவ வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தார். இதைக்கேட்ட அமைச்சர் ஆனந்த், உங்களின் கோரிக்கையை, கட்டாயம் முதல்வரிடம் கூறுவதாக உறுதியளித்தார்.
இத்தகவலை, முதல்வர் விஜயிடம் தெரிவித்தால் தான், என் மகன் ஆத்மா சாந்தியடையும் என, அப்பெண் கூறியது, அங்கிருந்தவர்களை கண்கலங்கச் செய்தது.