தேசிய ஸ்பீடு ஸ்கேட்டிங் போட்டியில் குப்பை மேடு துாய்மையை அலட்சியப்படுத்தியதால் அதிருப்தி
புதுச்சேரி: புதுச்சேரியில் துவங்கிய தேசிய அளவிலான ஸ்கேட்டிங் போட்டியில், பொறுப்பற்ற முறையில் குப்பைகள் கண்ட இடங்களில் வீசி எறிந்ததால் குப்பை மேடாக காட்சியளித்தது.
13-வது தேசிய ஓபன் ஸ்பீடு ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப் போட்டி புதுச்சேரி லாஸ்பேட்டை ஸ்கேட்டிங் மைதானத்தில் கடந்த 30ம் தேதி கோலாகலமாக தொடங்கியது. இப்போட்டியை இந்தியா ஸ்கேட்டிங் அமைப்பும், மாநில ஸ்கேட்டிங் சங்கமும் இணைந்து நடத்துகின்றன.
வரும் 2ம் தேதி வரை நடக்க உள்ள இப்போட்டியில் நாட்டின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 2,000-க்கும் மேற்பட்ட ஸ்கேட்டிங் வீரர்கள், வீராங்கனைகள் மற்றும் பயிற்சியாளர்கள் கலந்துகொண்டுள்ளனர்.
போட்டியில் பங்கேற்பவர்களுக்காக மைதான வளாகத்திலேயே உணவு அரங்கம் அமைக்கப்பட்டு, மூன்று வேளையும் உணவு வழங்கப்பட்டு வருகிறது.
ஆனால் உணவருந்தியவர்கள் சமூகப் பொறுப்பின்றி உணவுப் பொட்டலங்கள் மற்றும் கழிவுகளை கண்ட இடங்களில் வீசி சென்றுள்ளனர். இதனால் மைதானம் முழுதும் கழிவுகள் சிதறி, கடுமையான துர்நாற்றம் வீசத் தொடங்கியது. வழக்கம்போல காலையில் உடற்பயிற்சி மற்றும் நடைப்பயிற்சிக்கு வந்த பொதுமக்கள், மைதானத்தின் நிலையைக் கண்டு கடும் அதிர்ச்சியடைந்தனர்.
குப்பைத் தொட்டிகள் நிரம்பி வழிந்தபோதும், போட்டி ஏற்பாட்டாளர்கள் அவற்றை உடனடியாக அகற்ற எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் நிரம்பிய தொட்டிகள் கீழே சாய்ந்து, குப்பைகள் மைதானம் முழுதும் பரவின. மேலும், காற்றில் பறந்த குப்பைகளை நாய்களும் பறவைகளும் இழுத்துச் சென்று குதறியதால், பார்க்க அழகாக இருந்த ஹெலிபேட் மைதானம் முழுதும் அலங்கோலமாகக் காட்சியளித்தது. ஒருவழியாக தகவல் வந்த உழவர்கரை நகராட்சி துாய்மை பணியாளர்கள் அந்த குப்பைகளை அப்புறப்படுத்தினர்.
தேசிய அளவிலான இத்தகைய உயரிய போட்டி புதுச்சேரியில் நடைபெறுவது மாநிலத்திற்குப் பெருமை சேர்க்கும் விஷயம் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், துாய்மையைப் பராமரிப்பதில் அலட்சியம் காட்டுவது மிகுந்த அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. முதல் நாளிலேயே இந்த அளவுக்குக் குப்பைகள் சேர்ந்தால், அடுத்த நான்கு நாட்களுக்குள் முழு மைதானமும் குப்பை மேடாகவே மாறிவிடும். போட்டியை நடத்துவதில் காட்டும் கவனத்தை, மைதானத்தைத் துாய்மையாகப் பராமரிப்பதிலும் போட்டி ஏற்பாட்டாளர்கள் காட்ட முன்வர வேண்டும்.
போட்டி ஏற்பாட்டாளர்கள் உழவர்கரை நகராட்சியுடன் இணைந்து, குப்பைகளை உடனுக்குடன் அகற்றத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைச் செய்ய வேண்டும். அதே வேளையில், துாய்மையைப் பேணுவதும் சமூகப் பொறுப்பும் ஸ்கேட்டிங் சங்கங்களுக்கும், போட்டி ஏற்பாட்டாளர்களுக்கு மட்டும் உரியதல்ல. போட்டியில் பங்கேற்கும் வீரர்கள், பயிற்சியாளர்கள், பார்வையாளர்கள் மற்றும் பொதுமக்கள் என அனைவரும் பொறுப்புணர்ந்து, குப்பைகளைக் கண்ட இடங்களில் வீசாமல் அதற்காக ஒதுக்கப்பட்ட தொட்டிகளில் மட்டுமே போட வேண்டும்.
மேலும்
-
33 கேள்விகள் கேட்கப்படும்; இன்று முதல் வீடு வீடாக மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி துவக்கம்
-
ஆந்திரா, கர்நாடகாவுக்கு இன்று பயணம்; பல்வேறு வளர்ச்சி திட்டங்களை துவங்கி வைக்கிறார் பிரதமர் மோடி
-
ஈரானின் எரிசக்தி உள்கட்டமைப்புகளை குறிவைத்து தாக்குதல்; அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து திட்டம்
-
வணிக காஸ் சிலிண்டர் விலை ரூ.200 குறைவு; ஒரு சிலிண்டர் ரூ.2,906க்கு விற்பனை
-
பிரதமர் மோடி பற்றி அருவருக்கத்தக்க பேச்சு; வாய்க்கொழுப்பில் பேசிய பெண் மன்னிப்பு கேட்டு வீடியோ
-
'வீ த லீடர்ஸ்' சார்பில் விழிப்புணர்வு பேரணி