ஈரானின் எரிசக்தி உள்கட்டமைப்புகளை குறிவைத்து தாக்குதல்; அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து திட்டம்

2


நமது நிருபர்




அமெரிக்காவும், இஸ்ரேலும் இணைந்து ஈரானின் எரிசக்தி உள்கட்டமைப்பு மற்றும் முக்கிய இலக்குகள் மீது கடுமையான வான்வழித் தாக்குதல்களை நடத்தத் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஈரான் - அமெரிக்கா இடையிலான போர் மீண்டும் உச்சகட்டத்தை அடைந்துள்ளது. ஈரானின் முக்கிய இடங்களில் அமெரிக்கா சமீபத்தில் தாக்குதல் நடத்தியது. அதற்கு ஈரானின் அருகில் அமைந்துள்ள வளைகுடா நாடுகளை அமெரிக்கா பயன்படுத்தி வருகிறது.

தங்கள் நாட்டின் மீதான அமெரிக்க தாக்குதலுக்கு பதிலடி தரும் வகையில், குவைத், பஹ்ரைன், எகிப்து, சவுதி அரேபியா உள்ளிட்ட நாடுகளில் நிறுத்தப்பட்டுள்ள அமெரிக்க படைகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது. ஈரான் நடத்திய தாக்குதலில் குவைத்தில் உள்ள முக்கிய ராணுவ நிலைகள் அழிக்கப்பட்டன.

அது தவிர, அங்குள்ள மின் உற்பத்தி நிலையங்கள் உள்ளிட்ட முக்கிய இடங்களும் குறி வைத்து தகர்க்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. பஹ்ரைன் மற்றும் எகிப்து மீதும் ஈரான் ஏவுகணைகளை வீசியுள்ளது. இவற்றை அந்தந்தந்த நாடுகள் உறுதிப்படுத்தி உள்ளன.

குவைத் மீது பறந்த பல ஈரான் ட்ரோன்கள் தாக்கி அழிக்கப்பட்டதாக குவைத் அரசு வெளிப்படையாக அறிவித்துள்ளது. எகிப்தும் தங்கள் நாட்டின் மீதான ஈரான் தாக்குதலை உறுதிப்படுத்தி உள்ளது. ஈரான் - அமெரிக்கா போரால், மேற்காசியாவில் மீண்டும் பதற்றமான சூழல் நிலவுகிறது.

கடந்த சில நாட்களாக ஓய்ந்திருந்த சண்டை மீண்டும் தீவிரம் அடைந்துள்ளது சர்வதேச நாடுகள் இடையே கவலையை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் அமெரிக்காவும், இஸ்ரேலும் இணைந்து ஈரானின் எரிசக்தி உள்கட்டமைப்பு மற்றும் முக்கிய இலக்குகள் மீது கடுமையான வான்வழித் தாக்குதல்களை நடத்தத் திட்டமிட்டுள்ளதாக அமெரிக்க செய்தி நிறுவனங்கள் தகவல் தெரிவிக்கின்றன;

இந்தத் தாக்குதல்களுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் இன்னும் இறுதி ஒப்புதல் வழங்கவில்லை என்றாலும், வார இறுதிக்குள் நடவடிக்கை எடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement