காவிரி நீரை பெற இந்த அரசு என்ன நடவடிக்கை எடுத்தது; இபிஎஸ் கேள்வி

சென்னை: தமிழகத்திற்கு காவிரி நீரை பெற இந்த அரசாங்கம் என்ன நடவடிக்கை எடுத்தார்கள் என்றே தெரியவில்லை என அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை நினைவு தினத்தை முன்னிட்டு சென்னை கிண்டியில் அவரது உருவப் படத்துக்கு அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ், மலர் தூவி மரியாதை செலுத்தினார். நிருபர்களிடம் இபிஎஸ் கூறியதாவது: தவெக ஆரம்பித்து இரண்டேகால் வருஷம்தான் ஆகிறது; காவிரி பிரச்னை முழுமையாக தெரியாது.

தமிழகத்திற்கு காவிரி நீரை பெற இந்த அரசாங்கம் என்ன நடவடிக்கை எடுத்தார்கள் என்றே தெரியவில்லை. தமிழகத்தில் பல அரசியல் கட்சிகளும், விவசாய அமைப்புகளும் அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்; இந்த அரசு அதைப் பற்றி சிந்திக்கவும் இல்லை, கவலைப்படவும் இல்லை, பொருட்டாக எடுத்துக்கொள்ளவும் இல்லை. இது மிகுந்த வேதனை அளிக்கிறது.

கர்நாடகாவில் உள்ள அரசு அங்குள்ள அரசியல் கட்சிகளையும், விவசாயிகளையும் மதிக்கிறது. இங்கிருக்கும் அரசு செயல்படுகிறதா என்ற கேள்வி எழுகிறது. இந்த அரசுக்கு எந்த அனுபவமும் கிடையாது. அதிமுக, திமுக ஆட்சிகளில் காவிரி பிரச்னைகளில் எவ்வளவு போராட்டங்களை நடத்தியுள்ளோம் என்பது மக்களுக்கு தெரியும். இவ்வாறு இபிஎஸ் கூறினார்.

Advertisement