'ஜீ என்டர்டெயின்மென்ட்' மீதான தடை; சந்தையில் பங்குகள் நிலை என்ன ஆகும்?

ஹைதராபாத் நிலத்தை உரிய அனுமதியின்றி குழும நிறுவனங்களின் கடனுக்கு அடமானம் வைத்தது தொடர்பான வழக்கில், 'ஜீ என்டர்டெயின்மென்ட்' மற்றும் அதன் புரோமோட்டர்களுக்கு செபி தடை விதித்துள்ளது.

இதையடுத்து, பங்குச்சந்தையில் இந்நிறுவன பங்கு15 சதவீதம் வரை சரிந்தது. வர்த்தக நிறைவில் ஒரு பங்கின் விலை 14.33 சதவீதம் வீழ்ச்சிகண்டு, 98.14 ரூபாயில் முடிந்தது.

ஜீ என்டர்டெயின்மென்ட் நிறுவனம் 2 மாதங்கள் மூலதனச் சந்தையை அணுகத் தடை விதிக்கப்பட்டுள்ளதுடன் இந்நிறுவனத்துக்கு, 30 லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. மேலும், நிறுவனத்தின் புரோமோட்டர்களான சுபாஷ் சந்திரா மற்றும் புனித் கோயங்காவுக்கு தலா 12 மாதங்கள் பங்குச் சந்தையில் செயல்படவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

செபி விசாரணையின்படி, கடந்த 2018ல் ஜீ நிறுவனத்திற்கு சொந்தமான ஹைதராபாத் நிலத்தின் அசல் ஆவணங்கள், புரோமோட்டர் குழும நிறுவனங்களின் கடன்களுக்கு அடமானமாக பயன்படுத்தப்பட்டதாக தெரிகிறது.

இதற்கு தேவையான தணிக்கைக் குழு, இயக்குநர் குழு மற்றும் பங்குதாரர்களின் முன் ஒப்புதல் பெறப்படவில்லை என்பதோடு வெளிப்படைத்தன்மையுடன் நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை என்றும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதன் அடிப்படையில்தான் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் குறித்தும், இந்நிறுவன பங்குகளின் எதிர்காலம் பற்றியும் 'என்ரிச் மனி' நிறுவனர் பொன்முடி ஆர் தெரிவித்ததாவது:

இது, நிறுவனத்தின் வணிக வளர்ச்சி தொடர்பான பிரச்னை அல்ல; நிறுவனத்தின் நிர்வாக நடைமுறைகள் தொடர்பான பிரச்னை. ஒரு நிறுவனத்தின் வருவாய் அல்லது லாபம் குறைந்தால், அதை சந்தை ஓரளவிற்கு ஏற்றுக்கொள்ளும்.

ஆனால் நிர்வாக வெளிப்படைத்தன்மை மற்றும் முதலீட்டாளர்களின் நம்பிக்கை பாதிக்கப்படும் சூழல் உருவானால், அந்த நிறுவனத்தின் பங்குக்கு, சந்தை வழங்கும் மதிப்பீடு கணிசமாகக் குறையலாம்.

எனவே, புதிய முதலீட்டை அவசரமாக மேற்கொள்வதைவிட, செபி வழக்கின் அடுத்தகட்ட முன்னேற்றம், நிறுவனத்தின் நிர்வாக சீர்திருத்த நடவடிக்கைகள் மற்றும் 94 முதல் 95 ரூபாய் வரையிலான ஆதரவு நிலை தக்கவைக்கப்படுகிறதா என்பதை கவனித்த பிறகே, முதலீட்டு முடிவு எடுப்பது பாதுகாப்பான அணுகுமுறையாக இருக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதற்கிடையில், ஜீ என்டர்டெயின்மென்ட் நிறுவனம் அடுத்தகட்ட சட்டரீதியான நடவடிக்கைகளுக்கான வாய்ப்புகளை பரிசீலித்து வருவதாக தெரிவித்துள்ளது.

ஒரு நிறுவனத்தின் வருவாய் அல்லது லாபம் குறைந்தால், அதை சந்தை ஓரளவிற்கு ஏற்றுக்கொள்ளும். ஆனால், நிர்வாக வெளிப்படைத்தன்மை, நம்பிக்கை பாதிக்கப்படுமானால், நிறுவனத்துக்கு சந்தை வழங்கும் மதிப்பீடு கணிசமாகக் குறையலாம்.

Advertisement