தினமலர் நாளிதழ் செய்தி எதிரொலி:அய்யலுாரில் அச்சுறுத்திய குடிநீர் மேல்நிலை தொட்டி சீரமைப்பு

வடமதுரை: அய்யலுார் மணியகாரன்பட்டியில் பள்ளி அருகில் ஆபத்தாக இருந்த குடிநீர் மேல்நிலை தொட்டி தினமலர் நாளிதழ் செய்தி எதிரொலியாக சீரமைக்கப்பட்டது.

குடிநீர் மேல்நிலைத் தொட்டிகளின் கான்கிரீட் துாண்களுக்குள் இருக்கும் இரும்புக் கம்பி சிதையாமல் இருக்கும் வரையே பலமானதாக இருக்கும். கான்கிரீட் துாணில் ஏற்படும் விரிசல் மூலம் வெளிப்புற ஈரக்காற்று இரும்புக் கம்பி வரை செல்லும் போது துருப்பிடித்து பலமிழக்க துவங்கும்.

அப்போது நீர் எடையை தாக்க முடியாமல் தொட்டியின் சிதைந்து விழும். இதுபோல் வேடசந்துார் மாரம்பாடியில் சில மாதங்களுக்கு முன் நள்ளிரவில் மேல்நிலைத் தொட்டி இடிந்து விழுந்தது. ஆட்கள் நடமாட்டம் இல்லாத நேரத்தில் விழுந்ததால் யாருக்கும் பாதிப்பில்லை.

இதே போன்ற ஆபத்தான நிலையில் அய்யலுார் மணியகாரன்பட்டி அரசு நடுநிலைப் பள்ளி அருகில் 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு மேல்நிலைத் தொட்டியின் துாண்கள் சிதைந்து இருந்தது. இத்தொட்டி சாய்ந்தால் பள்ளி வளாகத்திற்குள் விழும் ஆபத்தும் இருந்தது.

இதுகுறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக தொட்டியில் நீர் ஏற்றுவது நிறுத்தப்பட்டு அண்ணா பல்கலை நிபுணர்கள் ஆய்வுக்கு பின் துாண்களை சுற்றிலும் கான்கிரீட் கட்டுமானம் உருவாக்கப்பட்டு மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. பொதுமக்களின் அச்சமும் தீர்ந்துள்ளது.

Advertisement