நுகர்பொருள் வாணிப கழக தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
கடலுார்: கடலுாரில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக பொது தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக கடலுார் மண்டல அலுவலக்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் மண்டல தலைவர் கலைவாணன் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் சங்கர், ராஜமுருகன், பீமாராவ் பாபுஜி, ஜெயபிரகாஷ் முன்னிலை வகித்தனர். சி.ஐ.டி.யூ., மாநில செயலாளர் இளங்கோ, மாவட்ட செயலாளர் பழனிவேல், மண்டல செயலாளர் சுதர்சன்பாபு, பொருளாளர் ஸ்டாலின் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் செந்தில்குமார், வாசுதேவன், பிரபு உட்பட பலர் பங்கேற்றனர். கொள்முதல் நிலையங்களில் பணியில் உள்ள போது, விளக்கம் கேட்காமல் பருவகால பணியாளர்களின் மீது நடவடிக்கை மேற்கொள்ளும் செயலை நிர்வாகம் கைவிட வேண்டும். நிரந்தர பணியாளர்களின் மாதாந்திர ஊதியத்தை போன்று, பருவகால பணியாளர்களின் மாதாந்திர ஊதியத்தை மாற்றி அமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.
துணைத் தலைவர் தினகரன் நன்றி கூறினார்.