தென்பெண்ணை ஆற்றின் கரையோர கிராமங்களில் விவசாயம்  கேள்விக்குறி: பருவ மழையை எதிர்பார்க்கும் இரு மாவட்ட விவசாயிகள்

தென்பெண்ணை ஆறு கர்நாடக மாநிலம் நந்தி துர்கா மலையில் உருவெடுத்து, தமிழக எல்லையான கிருஷ்ணகிரி, வேலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர் மாவட்டங்கள் வழியாக 430 கி.மீ., பயணித்து வங்கக் கடலில் கலக்கிறது.

இதன் குறுக்கே தமிழக எல்லையில் கெலவரப்பள்ளி, கே.ஆர்.பி., சாத்தனுார் அணைகள் உள்ளன. தென்மேற்கு பருவமழை காலத்தில் குறிப்பாக பெங்களூரு பகுதிகளில் பெய்யும் மழையின் காரணமாக தென்பெண்ணையாற்றில் பெருக்கெடுக்கும் வெள்ளம், தமிழக எல்லையில் உள்ள கெலவரப்பள்ளி, கே.ஆர்.பி., சாத்தனுார் அணைகள் நிரம்பி தென்பெண்ணையில் பிக்கெப், திருக்கோவிலுார், எல்லீஸ், சொர்ணாவூர் தடுப்பணைகளைக் கடந்து கடலில் கலக்கிறது.

திருக்கோவிலுார் அணைக்கட்டில் இருந்து பிரியும் பம்பை வாய்க்கால், மலட்டாறு, ராகவன் வாய்க்கால், மருதுார் வாய்க்கால், சித்தலிங்கமடம் வாய்க்கால் என ஐந்து வழித்தடங்களில் 98 ஏரிகளுக்கு நேரடியாக தண்ணீர் சென்று 25 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது.

நேரடி பாசனத்தின் மூலம் 25 ஆயிரம் ஏக்கர்மொத்தம் 50 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெறுகிறது.

இதே போல் எல்லீஸ் அணைக்கட்டு, சொர்ணாவூர் அணைக்கட்டு மூலமும் விவசாயிகள் பயன்பெறுகின்றனர்.

எனவே கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்ட விவசாயிகளின் முக்கிய நீர் ஆதாரமாக தென்பெண்ணை விளங்குகிறது.முக்கியத்துவம் வாய்ந்த பெண்ணையாற்றின் நீர் பிடிப்பு பகுதிகளில் தென்மேற்கு பருவமழையின் துவக்கத்தில் பெய்த சீரான மழையின் காரணமாக கெலவரப்பள்ளி, கே.ஆர்.பி., அணைகள் நிரம்பி சாத்தனுார் அணைக்கு உபரி நீர் ஜூன் 4ம் தேதி முதல் வினாடிக்கு 200 கன அடி வீதம் சீரான அளவில் வந்தது.

இதுவும் கடந்த மாதம் 2ம் தேதியுடன் நின்று போனது. நேற்று காலை நிலவரப்படி 119 அடி, 7,321 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட அணையில், 86.55 அடி அதாவது 2,095 மில்லியன் கன அடி மட்டுமே தண்ணீர் உள்ளது.

இது திருவண்ணாமலை கூட்டுக் குடிநீர் திட்டம், அணையின் பூங்கா உள்ளிட்ட தேவைகளுக்கு மட்டுமே போதுமானதாக இருக்கும் என்பதால் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படவில்லை.

வழக்கமாக ஜூன், ஜூலை மாதங்களில் சாத்தனுார் அணை பெரும்பாலும் நிரம்பிவிடும் சூழலில் திறக்கப்படும் தண்ணீர் ஆகஸ்ட், செப்டம்பர் மாதத்தில் தென்பெண்ணையில் தொடர்ச்சியாக நீர் வரத்து இருக்கும். அக்டோபர் மாதம் மத்தியில் வடகிழக்கு பருவமழை துவங்கிவிடும். எனவே தொடர்ந்து 6 மாதங்களுக்கு மேல் தென்பெண்ணையில் நீர் வரத்து இருக்கும்.

ஆனால், இந்த ஆண்டு தென்பெண்ணை ஆற்றின் நீர்பிடிப்பு பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தொடர்ச்சியாக இல்லாததால், சாத்தனுார் அணை நிரம்பவில்லை.

இதனால் தென்பெண்ணை வறண்டு பாலைவனம் போல் காணப்படுகிறது.

இதன் காரணமாக தென்பெண்ணை ஆற்றில் இருந்து நீர் செல்லும் ஏரிகள் வறண்டன. இதனால், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்ட விவசாயிகள் சம்பா சாகுபடிக்காக ஆடி மாதம் நாற்றங்கால் தயார் செய்யும் பணியை தள்ளிப் போட்டுள்ளனர்.

சாத்தனுார் அணையில் 28.61 சதவீதம் மட்டுமே நீர் இருப்பு உள்ள சூழலில், சம்பா சாகுபடிக்கு தண்ணீர் திறப்பது கேள்விக்குறியாகவே உள்ளது. எல்நினோ உள்ளிட்ட இயற்கை சூழல் காரணமாக வடகிழக்கு பருவமழையும் தமிழகத்துக்கு கை கொடுக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

'வெண்ணெய் உருகும் முன்னே, பெண்ணை பெருகும்' என்ற பழமொழிக்கு ஏற்ப திடீர் பெருமழை ஏற்பட்டு தென்பெண்ணையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் மட்டுமே வரும் நாட்களில் விவசாயம் மட்டுமல்ல குடிநீருக்கும் தட்டுப்பாடு ஏற்படாது. இல்லையென்றால் வறட்சியின் கோரத்தாண்டவம் விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களை வாட்டி வதைக்கும் சூழல் உருவாகலாம்.

தென்மேற்கு பருவ மழையை நம்பி மானாவாரியில் பயிரிட்ட கம்பு, வேர்க்கடலை உள்ளிட்ட பயிர்கள் கருகிப்போன சூழலில், நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்து வருவதால், முப்போக சாகுபடி மேற்கொள்ளும் தென்பெண்ணை ஆற்றின் கரையோர விவசாயிகளின் விவசாயம் கேள்விக்குறியாகி உள்ளது.

Advertisement