சக போலீசாருக்கு விடுப்பு வழங்க லஞ்ச வசூல் அம்பலம்: எஸ்ஐ., ஏட்டு சஸ்பெண்ட்

9


திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் தமிழக சிறப்பு காவல்படை 11வது பட்டாலியனில் போலீசாருக்கு விடுப்பு வழங்க லஞ்சம் வசூலிக்கப்பட்ட புகாரில், சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் ஒரு தலைமைக் காவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் மூன்று போலீசார் வேறு இடத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

ராஜபாளையத்தை தலைமையிடமாகக் கொண்ட தமிழக சிறப்பு காவல்படை 11வது பட்டாலியனில் பணியாற்றும் போலீசார் 90 பேர், திருநெல்வேலி மாவட்டத்தில் வெவ்வேறு இடங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இவர்களில் சிலர், விடுப்பு எடுப்பதற்காக தங்களிடம் அதிகாரிகள் லஞ்சம் வசூலிப்பதாக புகார் அளித்தனர். ஆயுதப்படை போலீஸ் நிர்வாகம் டி.ஐ.ஜி. ஆண்டனி ஜான்சன் ஜெயபாலை விசாரணை அதிகாரியாக நியமித்தது.

விசாரணையின்போது லஞ்சப் பரிவர்த்தனை விவரங்கள், போலி கையொப்பங்கள், போலி மெஸ் பில்கள் உள்ளிட்ட ஆதாரங்கள் ஆய்வு செய்யப்பட்டன.
சம்பளத்துடன் கூடிய ஒரு நாள் விடுப்புக்கு ரூ.150 முதல் ரூ.200 வரை, 20 நாள் மருத்துவ விடுப்புக்கு ரூ.4 ஆயிரம், திருமண விடுப்புக்கு ரூ.6 ஆயிரம் வரை லஞ்சம் வசூலிக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

மேலும், மாதந்தோறும் ரூ.20 ஆயிரம் பெற்றுக்கொண்டு சிலருக்கு பல மாதங்கள் கணக்கில் வராத விடுப்பு வழங்கப்பட்டதாகவும், லஞ்ச வசூலுக்கு உதவிய தலைமைக் காவலர்களுக்கு ஓராண்டில் 100 நாட்களுக்கும் அதிகமான கணக்கில் வராத விடுப்பு வழங்கப்பட்டதாகவும் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் நீண்ட நாட்கள் பணியிடத்தில் இல்லாமல் கர்நாடகா மற்றும் சொந்த ஊரில் இருந்தபோதும் சம்பளம் பெற்றதாகவும், கம்பெனி எழுத்தர் தினேஷ்குமார் அவரது கையொப்பத்தை போலியாக பயன்படுத்தியதும் விசாரணையில் உறுதியானது. மட்டன், அரிசி உள்ளிட்ட உணவுப் பொருட்கள் கொள்முதலிலும் போலி பில்கள் மூலம் பல லட்சம் ரூபாய் முறைகேடு நடந்ததும் தெரியவந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த விவகாரத்தில் துறை ரீதியான விசாரணை மட்டுமின்றி, லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணையும் நடத்தி, சம்பந்தப்பட்ட அனைவரின் மீதும் ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என போலீசார் கோரிக்கை விடுத்துள்ளனர். விசாரணை அறிக்கையில் விசாரணையில் பெரும்பாலான குற்றச்சாட்டுகள் உண்மை என தெரியவந்துள்ளது.

இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ், தலைமைக் காவலர் பாலசுப்பிரமணியன் ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். மேலும் 3 போலீசார் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதை போலீஸ் உயரதிகாரிகள் உறுதிப்படுத்தி உள்ளனர்.

Advertisement