அமெரிக்காவில் 28 ஆயிரம் புலம்பெயர்ந்த டிரக் டிரைவர்களின் உரிமம் ரத்து; இந்தியர்கள் பாதிப்பு

1

வாஷிங்டன்: அமெரிக்காவில் புலம்பெயர்ந்த வெளிநாட்டைச் சேர்ந்த 28 ஆயிரம் டிரக் டிரைவர்களின் உரிமத்தை ரத்து செய்து அதிபர் டிரம்ப் நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதனால், ஆயிரக்கணக்கான இந்திய ஓட்டுநர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அமெரிக்காவின் சாலை விதிகளை முறையாக பின்பற்றாத வெளிநாட்டு ஓட்டுநர்களால் விபத்துக்கள் ஏற்படுவதாக குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. குறிப்பாக, கடந்த ஆண்டு புளோரிடாவில் இந்தியாவைச் சேர்ந்த ஒரு டிரக் டிரைவர் விதிகளை மீறி யூ-டர்ன் எடுத்த போது ஏற்பட்ட விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தைத் தொடர்ந்து புலம்பெயர்ந்த ஓட்டுநர்கள் மீதான கெடுபிடிகள் தீவிரமடைந்தன.

புலம்பெயர்ந்த டிரைவர்களுக்குப் பதிலாக அமெரிக்க ராணுவத்தில் கனரக வாகனங்களை ஓட்டிய அனுபவமுள்ள முன்னாள் படைவீரர்களை நியமிக்கும் 'ப்ரீடம் ஹாலர்ஸ்' என்ற திட்டத்தை அதிபர் டிரம்ப் அறிமுகப்படுத்தினார்.

இந்த நிலையில், புலம்பெயர்ந்த வெளிநாட்டைச் சேர்ந்த 28 ஆயிரம் டிரக் டிரைவர்களின் உரிமத்தை அமெரிக்கா அரசு ரத்து செய்துள்ளது. இதில், பெரும்பாலும் இந்தியாவைச் சேர்ந்த டிரைவர்களே பாதிக்கப்பட்டுள்ளனர்.

இது குறித்து வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் கரோலின் லீவிட் கூறியதாவது; ஆங்கில மொழியை சரியாக பேசவோ, படிக்கவோ தெரியாத 28,000 புலம்பெயர்ந்த டிரைவர்களின் வணிக ரீதியிலான ஓட்டுநர் உரிமங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும், இந்த டிரைவர்கள் அமெரிக்காவில் வாகனம் ஓட்டுவதற்கு உதவிய 9,500 டிரைவர் பயிற்சிப் பள்ளிகளையும் மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது, இவ்வாறு கூறினார்.

அமெரிக்காவில் உள்ள சுமார் 15 லட்சம் டிரக் டிரைவர்களில் பெரும்பாலானோர் இந்தியாவின் பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement