கால்வாயிலோ அடைப்பு: கொசுக்கடியால் தவிப்பு

சோழவந்தான்: சோழவந்தான் பேட்டை 2 வது வார்டில் சாக்கடை கால்வாய் அடைப்பால் அப்பகுதியினர் தவியாய் தவிக்கின்றனர்.

இங்கு வடகரை கண்மாய் பாதையில் சந்தன மாரியம்மன் கோயில் அருகே சாக்கடை கால்வாய் மீது 15 ஆண்டுகளுக்கு முன்பு சிறிய பாலம் அமைக்கப்பட்டது. தற்போது ரோடு உயர்ந்து பாலம் தாழ்ந்துவிட்டது. இதனால் கழிவுகள் அடைத்துள்ளதால் தண்ணீர் செல்ல வழியின்றி தேங்குகிறது.

முன்னாள் கவுன்சிலர் சேதுராமன் கூறியதாவது: இங்கு ஐந்நுாறுக்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. பேரூராட்சி சார்பில் சாக்கடை சுத்தம் செய்யப்படுவதில்லை. பெயரளவுக்கு மட்டுமே பணிகள் நடக்கின்றன. பாலத்தின் அடியில் பல மாதங்களாக கழிவுகள் தேங்கி நிற்கின்றன. துர்நாற்றம் வீசி சுகாதார சீர்கேடு நிலவுகிறது.

தேங்கியுள்ள நீரில் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவுகிறது. குப்பையை முறையாக அகற்றாததால் அவை சாக்கடைக்குள் விழுந்து அடைத்துக் கொள்கிறது. இதுகுறித்து செயல் அலுவலரிடம் பலமுறை தெரிவித்தும் கண்டு கொள்ளவில்லை. முன்னாள் கவுன்சிலரான என்னாலும் எதுவும் செய்ய முடியவில்லை. சாமானிய மக்கள் என்ன பாடுபடுவர். மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Advertisement