புதிய மாம்பழ தொழில் பூங்காக்கள் பலன் தராது என்கிறது கூட்டமைப்பு

சென்னை: கிருஷ்ணகிரி - தர்மபுரி மாவட்டங்களில் ஒருங்கிணைந்த 5 மாம்பழ பதப்படுத்தும் தொழில் பூங்காக்கள் அமைக்க உள்ளதாகவும், மாம்பழ தொழில் வழித்தடம் உருவாக்க போவதாகவும் அரசின் 'வெற்றி தமிழகம் தொலைநோக்கு ஆவண'த்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிதாக அமைப்பதற்கு பதிலாக, ஏற்கனவே இருக்கும் மாம்பழக்கூழ் தொழிற்சாலைகளை மேம்படுத்தவும், மாம்பழக்கூழ் விற்பனையை அதிகரிக்கவும், மாம்பழங்களுக்கு நியாயமான விலை கிடைப்பதை உறுதி செய்யவும் தமிழக அரசு முயல வேண்டும் என்று மாம்பழக்கூழ் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து கூட்டமைப்பின் பொதுச்செயலர் மாதவன் கூறியதாவது:

கிருஷ்ணகிரி மற்றும் தர்மபுரி மாவட்டங்களில் ஆண்டுக்கு 10 லட்சம் டன் மாம்பழங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. கிட்டத்தட்ட 25 மாம்பழக்கூழ் உற்பத்தி ஆலைகள் செயல்படுகின்றன.

ஆந்திரா, கர்நாடகாவில் இருந்தும் மாம்பழங்கள் வருவதால் மாம்பழக்கூழ் மற்றும் மாம்பழ உற்பத்தியில் ஒரு பெரிய மையமாக கிருஷ்ணகிரி செயல்படுகிறது. இந்தாண்டு 2 லட்சம் டன் மாம்பழக்கூழ் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. அவை விற்பனையாகாமல் தேங்கியுள்ளன. மின்சார கட்டணம், பேக்கிங் மெட்டீரியல் விலை, பணியாளர்கள் சம்பளம் என மாம்பழக்கூழ் உற்பத்தியில் செலவினங்கள் அதிகரித்துவிட்டன.

மாம்பழக்கூழ் விற்பனைக்கு தமிழக அரசு உதவ வேண்டும். ஏற்கனவே, ஒரு சிறப்பு மையம்போல் கிருஷ்ணகிரி செயல்பட்டு கொண்டிருக்கும்போது புதிதாக தொழிற்பூங்காக்களையும், தொழில் வழித்தடங்களையும் அமைப்பதால் பெரிய பலன் கிடைக்காது.

இவ்வாறு கூறினார்.

Advertisement