இனி, கோட்ட அலுவலகங்களில் மத்திய ஜி.எஸ்.டி., எண் பெறலாம் தாமதமின்றி அனுமதி கிடைக்கும்

திருப்பூர்: மத்திய ஜி.எஸ்.டி., பதிவுக்கு கோட்ட அலுவலகங்களிலேயே அனுமதி வழங்கும் நடைமுறை இன்று முதல் அமலுக்கு வருகிறது. இதனால், வர்த்தகர்கள், புதிய ஜி.எஸ்.டி., பதிவு எண் பெறுவதில் காலதாமதம் தவிர்க்கப்படும்.

உற்பத்தி, வர்த்தகம், சேவை சார்ந்த தொழில் முனைவோர், புதிய ஜி.எஸ்.டி., பதிவுக்காக, உரிய ஆவணங்களுடன் ஆன்லைனில் விண்ணப்பிக்கின்றனர். அந்த விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு, குறிப்பிட்ட வர்த்தகர், மத்திய ஜி.எஸ்.டி., அல்லது மாநில வணிக வரித்துறையில் சேர்க்கப்பட்டு, பதிவு செய்யப்படுகிறது. மத்திய ஜி.எஸ்.டி.,க்கு, தமிழகம் முழுதும் அனைத்து மாவட்டங்களிலும் கோட்ட அலுவலகங்கள் செயல்படுகின்றன.

ஆனாலும், ஜி.எஸ்.டி., பதிவு சென்னை அலுவலகத்தில் மட்டுமே கையாளப்படுகிறது. இதனால், மத்திய ஜி.எஸ்.டி.,யில் பதிவு செய்து, பதிவெண் பெற வர்த்தகர்கள் நீண்ட நாட்கள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. புதிதாக தொழில் துவங்குவோர், பொருட்கள் கொள்முதல் அல்லது விற்பனையின்போதும் ரசீதுகளில் ஜி.எஸ்.டி., எண் குறிப்பிட முடிவதில்லை. இது, வர்த்தகர்களுக்கு பல்வேறு சிரமங்களை ஏற்படுத்துகிறது.

இதற்கு தீர்வாக, ஜி.எஸ்.டி., பதிவுக்கு கோட்ட அளவிலேயே அனுமதி வழங்கும் நடைமுறை கொண்டு வரப்பட்டுள்ளது. இப்புதிய நடைமுறை, இன்று முதல் அமலுக்கு வருகிறது. இதனால், புதிய பதிவுக்கான விண்ணப்பங்கள் பரிசீலனை வேகம் பெறுவதோடு, ஜி.எஸ்.டி., எண் விரைவாக கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement