எம்.பி.பி.எஸ்., கலந்தாய்வு நடைமுறை மாற்றம் இல்லை: தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: 'மருத்துவ படிப்புகளுக்கான மாநில கலந்தாய்வு நடைமுறையில், மத்திய அரசு முன்மொழிந்துள்ள திருத்தங்களை, ஏற்கனவே தமிழக அரசு பின்பற்றி வருவதால், தற்போது அதில் எந்த மாற்றமும் இல்லை' என, மாநில மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கை குழு தெரிவித்துள்ளது.

மத்திய அரசின் மருத்துவ கலந்தாய்வு குழுவான எம்.சி.சி., அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கான கலந்தாய்வு விதிகளில், சில மாற்றங்களை செய்துள்ளது.

இதனால், தமிழகத்தின் மாநில ஒதுக்கீட்டு இடங்களுக்கான விதிகளிலும் திருத்தங்கள் செய்யப் படுமா என்ற சந்தேகம், மாணவர்கள் மற்றும் பெற்றோர் இடையே எழுந்தது. அதற்கு விளக்கம் அளிக்கும் வகையில், மாணவர் சேர்க்கை குழு வெளியிட்ட அறிவிப்பு:

சான்றிதழ் சரிபார்ப்பு நடைமுறையை பொறுத்தவரை, தமிழகத்தில் வழக்கம்போல், ஒருங்கிணைந்த இணையவழி நடைமுறை தொடர்ந்து செயல்படுத்தப்படும். விண்ணப்ப பதிவின்போது, மாணவர்கள் பதிவேற்றம் செய்யும் சான்றிதழ்கள், இணைய வழியிலேயே ஆய்வு செய்யப்படும்.

கலந்தாய்வுக்கு பின், சம்பந்தப்பட்ட மாணவர்கள், கல்லுாரியில் சேரும்போது மட்டுமே அசல் சான்றிதழ்கள் நேரடியாக சரி பார்க்கப்படும்.

கலந்தாய்வு வழியே ஒதுக்கீடு பெற்ற மருத்துவ இடங்களில் சேர விரும்பாத மாணவர்கள், அதற்கான நிராகரிப்பு விண்ணப்பங்களை, இணைய வழியில் மட்டுமே பதிவு செய்ய வேண்டும்.

மாணவர் சேர்க்கை குழுவின் அதிகாரப்பூர்வ இணையதளம் www.tnmedicalselection.org வாயிலாகவே, அந்த இடத்தை திருப்பி வழங்க விண்ணப்பிக்க வேண்டும். நேரடியாக அளிக்கப்படும் கோரிக்கைகள் ஏற்கப்படாது.

முதல் சுற்றில் பங்கேற்ற மாணவர்கள், அடுத்தடுத்த சுற்றுகளில் இடங்களை மாற்றிக் கொள்ளும் முறை, வழக்கம்போல் தொடரும். இதற்கான விரிவான வழிகாட்டுதல்கள் மாநிலத் தகவல் குறிப்பேட்டில் இடம் பெற்றுள்ளன.

அரசு ஒதுக்கீடு, நிர்வாக ஒதுக்கீடு, சிறுபான்மையினர் மற்றும் வெளிநாடு வாழ் இந்தியர் ஒதுக்கீட்டு இடங்கள் அனைத்தும், ஏற்கனவே உள்ள நடைமுறைப்படி நிரப்பப்படும். மருத்துவக் கலந்தாய்வு குறித்த அதிகாரப்பூர்வத் தகவல்கள், மாணவர் சேர்க்கைக் குழு இணையதளத்தில் வெளியிடப்படும். சமூக வலைதளங்களில் பரவும் வதந்திகளையும், தவறான தகவல்களையும் நம்ப வேண்டாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement