தனலட்சுமி சீனிவாசன் பல்கலையில் ‘ஹர் கர் திரங்கா’ தேசிய கொடி ஏற்றம்

பெரம்பலுார்: ‘ஹர் கர் திரங்கா’ வீடுதோறும் தேசியக்கொடி பிரசாரத்தில் தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழக மைய வளாகத்தில் வேந்தர் சீனிவாசன் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். 

நாட்டின் 80-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, ‘ஹர் கர் திரங்கா’ வீடு தோறும் தேசியக்கொடி பிரசாரத்தின் ஒரு பகுதியாக, பெரம்பலுார் தனலட்சுமி சீனிவாசன் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் அனைத்து கல்வி நிறுவனங்களிலும் நேற்று தேசியக் கொடி ஏற்றப்பட்டது. 

பல்கலைக்கழக வேந்தர் சீனிவாசன் மைய வளாகத்தில் தேசியக் கொடியை ஏற்றி துவக்கி வைத்தார்.

அவர் பேசுகையில், ‘நாட்டின் ஒற்றுமையையும், தேசபக்தியையும் வலியுறுத்தும் வகையில், ‘ஹர் கர் திரங்கா’ என்ற முயற்சியை முன்னெடுத்துள்ள பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். ஒவ்வொரு குடிமகனின் இதயத்திலும் தேசியக் கொடியின் பெருமை பதியச் செய்யும் இந்த முயற்சி, நாட்டின் ஒற்றுமைக்கு ஒரு புதிய உந்துதலை அளிக்கும்.

நாம் ஏற்றும் மூவர்ணக் கொடி வெறும் அடையாளம் அல்ல. அது நமது தாயகத்தின் சுதந்திரத்தையும், இறையாண்மையையும் பறைசாற்றும் புனிதமான சின்னம் என்றார். 

தொடர்ந்து, பொறியியல் கல்லுாரி, மருத்துவக் கல்லுாரி, மருந்தியல் கல்லுாரி, சட்டக் கல்லுாரி, நர்சிங் கல்லுாரி, மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லுாரி, துணை சுகாதார அறிவியல் கல்லுாரி, கல்வியியல் கல்லுாரி, உடற்கல்வியியல் கல்லுாரி, பாலிடெக்னிக் கல்லுாரி, பள்ளிகள் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட வளாகங்களிலும் தேசியக் கொடி ஏற்றப்பட்டது. 

இதில், தனலட்சுமி சீனிவாசன் நிகர்நிலைப் பல்கலைக்கழக மாணவர்களின் இல்லங்கள் மற்றும் ஆசிரியர்களின் இல்லங்கள் என, 30,000-க்கும் மேற்பட்டோர் வீடுகளில் தேசியக் கொடியை ஏற்றுமாறு வலியுறுத்தப்பட்டது.

Advertisement