பிரதமர் குறித்த ஏ.ஐ., அவதூறு வீடியோ; மெட்டா நிறுவனத்திற்கு மத்திய அரசு கடும் எச்சரிக்கை

14


புதுடில்லி: பிரதமர் மோடிக்கு எதிரான ஏஐ அவதூறு வீடியோ மற்றும் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான ஆபாச வீடியோக்கள் தொடர்பாக பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமின் தலைமை நிறுவனமான மெட்டாவுக்கு மத்திய அரசு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

வினாத்தாள் கசிவுக்கு எதிராக டில்லியில் போராட்டம் நடத்திய இளைஞர்களுக்கு உறுதியளிக்கும் விதமாக, பிரதமர் மோடி பேசிய செல்பி வீடியோ, அவரது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இந்த வீடியோ சிறிது நேரம் முடக்கப்பட்டதால் மத்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்தது. இது தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஏற்பட்ட பிரச்னை எனக் கூறி, மெட்டா நிறுவனம் மன்னிப்பு கோரியது.

ஆனால், இந்த விளக்கம் போதுமானதாக இல்லை எனக் கூறி, அதனை மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் நிராகரித்தது. மேலும், டில்லியில் இன்றும், நாளையும் நடைபெறும் உயர்மட்டக் கூட்டத்தில் ஆஜராகுமாறு மெட்டா நிறுவன அதிகாரிகளுக்கு மத்திய அரசு சம்மன் அனுப்பியிருந்தது.

இந்த நிலையில், இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்குட்பட்டு நடக்கவில்லை எனில், பாதுகாப்பு சலுகைகள் வழங்க முடியாது என்று மெட்டா நிறுவனத்திற்கு தகவல் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத்திற்கான பார்லி குழு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாக பாஜ எம்பியும், பார்லி குழுவின் தலைவருமான நிஷிகாந்த் துபே, தனது எக்ஸ் தளப்பக்கத்தில் தெரிவித்ததாவது: பிரதமர் மோடி, குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான அவதூறு ஏஐ வீடியோக்கள் தொடர்பாக மெட்டா நிறுவனத்தின் மீது தெலுங்கானா போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அதேபோல, நிதி மோசடி செயலிகள் தொடர்பாக கூகுள் மீது ஹைதராபாத் போலீஸ் பதிவு செய்துள்ள வழக்குகளுக்கு, இந்தியத் தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் கீழ் வலைதளங்களுக்கான பாதுகாப்பு வழங்கப்படாது. இந்தச் சமூக வலைதளத் தளங்கள் இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்குக் கட்டுப்பட்டே ஆக வேண்டும், இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

Advertisement