பெண் கொலை வழக்கில் ஒருவருக்குஆயுள் : 5 பேருக்கு ஓராண்டு சிறை

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே குடும்ப தகராறில் பெண் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் ஒருவருக்கு ஆயுள் தண்டனையும்,  ஐந்து பேருக்கு ஓராண்டு சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது.

 கமுதி  அருகே உள்ள சின்ன உடப்பங்குளம் கிராமத்தை சேர்ந்த வலம்புரி மனைவி மல்லிகா 25. வீரமணி மனைவி வீரவள்ளி 32.  உறவினர்களான இவர்கள் இடையே குடும்ப தகராறு காரணமாக அடிக்கடி பிரச்னை ஏற்பட்டுள்ளது.  கடந்த 2015  ஜன., 20ல் நடந்த தகராறில் மல்லிகாவை, பாலகிருஷ்ணன் மனைவி சரஸ்வதி 55,  மகன்கள் ராமர் 30, ராஜா 27, ராமரின் மனைவி கற்பகவள்ளி 27, ராஜாவின் மனைவி அம்பிகா 25, வீரமணி 27, அவருடைய மனைவி வீரவள்ளி 25, அங்குச்சாமி மனைவி நாகவள்ளி 65 ஆகியோர் சேர்ந்து உருட்டு கட்டை, இரும்பு கம்பியால் தாக்கியதில்  அவர் இறந்தார். 

ராமர், ராஜா, வீரமணி, வீரவள்ளி,  சரஸ்வதி, நாகவள்ளி, கற்பகவள்ளி, அம்பிகா ஆகியோரை மண்டலமாணிக்கம் போலீசார் கைது செய்தனர்.  இவ்வழக்கு விசாரணை ராமநாதபுரம் விரைவு மகளிர்  நீதிமன்றத்தில்  நடந்தது.  இதில் ராமர்,  சரஸ்வதி  இறந்துவிட்டனர்.  ராஜாவிற்கு ஆயுள் தண்டனையும் ரூ.5000 அபராதமும்,  வீரமணி, வீரவள்ளி, நாகவள்ளி, கற்பகவள்ளி, அம்பிகா ஆகியோருக்கு தலா ஓராண்டு சிறை தண்டனையும், ரூ. 1000 அபராதமும் விதித்து நீதிபதி கவிதா தீர்ப்பளித்தார்.

Advertisement