தொடரும் மின் ஒயர் திருட்டு விவசாயிகள் கவலை
செஞ்சி: சிங்கவரம் பகுதியில் இரு தினங்களில், 5 க்கும் மேற்பட்ட விவசாய கிணறுகளில் மின் ஒயர்கள் திருடப்பட்டுள்ளன.
செஞ்சி தாலுகா முற்றிலும் விவசாயம் சார்ந்த பகுதி. இந்த ஆண்டு பருவமழை பொய்த்து போனதால் பயிர்கள் கருகி விவசாயிகள் வேதனையில் உள்ளனர்.
இந்நிலையில் கடந்த சில மாதங்களாக கப்பை, சொரத்துார், வல்லம் உள்ளிட்ட பகுதியில் விவசாய கிணறுகளில் தொடர்ச்சியாக மின் ஒயர்கள் திருடப்பட்டு வந்தன.
கிராமங்களுக்கு குடிநீர் வழங்கும் கிணறுகளிலும் மின் ஒயர்கள் திருடப்பட்டதால் குடிநீர் வினியோகமும் பாதிக்கப்பட்டது.
இது குறித்து புகார் கொடுத்தும் போலீசார் வழக்கு பதியாமல் அலட்சியம் காட்டி வருகின்றனர்.
இதனால் மின் ஒயர் திருட்டு சம்பவம் தொடர்கதையாகி உள்ளது. கடந்த இரு தினங்களில் மட்டும், சிங்கவரம் கிராமத்தில் 5க்கும் மேற்பட்ட விவசாய கிணறுகளில் இருந்து மின் ஒயர்களை திருடி சென்றுள்ளனர். இது குறித்து பரசுராமன் என்பவர் செஞ்சி போலீசில் நேற்று புகார் செய்துள்ளார்.
செஞ்சி பகுதியில் மின் ஒயர் திருட்டு தொடர்ந்து நடந்து வருவதால் கவலையடைந்துள்ள விவசாயிகள், காவல்துறை உயர் அதிகாரிகள் இதில் கவனம் செலுத்தி திருட்டில் ஈடுபடும் நபர்களை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.