வட்டார போட்டிகளில் பங்கேற்று பள்ளி மாணவர்கள் சாதனை
விக்கிரவாண்டி: அத்தியூர் திருக்கை அரசு பள்ளி மாணவர்கள் வட்டார அளவிலான போட்டிகளில் முதலிடம் பெற்று மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர்.
காணை வட்டார அளவிலான குறுமைய விளையாட்டு போட்டி, கக்கனுார் விஜயலட்சுமி மெட்ரிக்குலேஷன் பள்ளியில் நடந்தது.
இந்த போட்டிகளை பள்ளி தாளாளர் ரவிவர்மன் தலைமை தாங்கி துவக்கி வைத்தார். விக்கிரவாண்டி அடுத்த அத்தியூர் திருக்கை அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்கள், பல்வேறு போட்டிகளில் பங்கேற்று முதலிடம் பெற்று சாதனை படைத்தனர்.
19 வயதிற்குட்பட்ட செஸ் போட்டியில் பிளஸ் 2 மாணவர் ஆகாஷ் முதலிடம் பிடித்தார். தடகள போட்டியில் 19 வயது பிரிவில் 110 மீட்டர் ,1500 மீட்டர் ஓட்டத்தில் பிளஸ் 2 மாணவி தமிழ்செல்வி, 3000 மீட்டர் ஓட்டத்தில் மாணவர் ஆகாஷ்,
1600 மீட்டர் ஓட்டத்தில் மாணவர் பாலாஜி ஆகியோர் முதலிடம் பிடித்தனர்.
14 வயது,19 வயது பிரிவு கோ–கோ விளையாட்டில் பள்ளி மாணவர்கள் முதலிடம் பிடித்தனர். கோ–கோ விளையாட்டில், தொடர்ந்து 18 ஆண்டுகளாக முதலிடம் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. இவர்கள் மாவட்ட அளவிலான போட்டியில் பங்கேற்க தேர்வு பெற்றுள்ளனர்.
வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பள்ளி தலைமை ஆசிரியர் விஜயலட்சுமி, உதவி தலைமை ஆசிரியர் ராம்குமார் , உடற்கல்வி இயக்குனர் சரவணன் , பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர்கள் பாராட்டினர் .