ஆதனுார்- குமாரமங்கலம் தடுப்பணை பயன்பாட்டிற்கு வருவது... எப்போது:நிலத்தடி நீர்மட்டம் குறைவதால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்

காட்டுமன்னார்கோவில்:கொள்ளிடம் ஆற்றில் ஆதனுார் - குமாரமங்கலம் இடையே கட்டப்பட்டுள்ள தடுப்பணையில் தண்ணீர் தேக்கி வைக்கப்படாததால் 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் நிலவி வருகிறது.

கடலுார் மாவட்டத்தில் கடந்த 2019ம் ஆண்டு கொள்ளிடம் ஆற்றில் காட்டுமன்னார்கோவில் அடுத்த ஆதனுார் - தஞ்சை மாவட்டம் குமாரமங்கலம் தடுப்பணை பாலம் ரூ.495 கோடி மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. ஆதனுார் தடுப்பனை பாலம் 1064.5 மீட்டர் நீளமும், 28 மீட்டர் அகலம் கொண்ட தடுப்பணையின் மூலம் கொள்ளளவாக 0.334 டி.எம்.சி அளவில் தண்ணீர் சேமிக்க முடியும். இது போன்று ஆண்டுக்கு நான்கு முறை கீழணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டு 1.072 டி.எம்.சி தண்ணீர் சேமிக்கும் வகையில் திட்டமிட்டு புதிய தடுப்பணை பாலம் கட்டப்பட்டுள்ளது. இதன் மூலம் தஞ்சை, மயிலாடுத்துறை, கடலுார் மாவட்டங்களில் நிலத்தடி நீர் மட்டம் உயரும். மேலும் இந்த அணையில் இருந்து வடக்கு ராஜன் வாய்க்கால் மூலம் கடலுார் மாவட்டத்திலும், தெற்கு ராஜன்வாய்க்கால் மூலம் தஞ்சை, மயிலாடுதுறை மாவட்டங்களில் டெல்டா நிலங்கள் பாசன வசதி பெறும். தடுப்பணை பாலம் பணிகள் முடிந்து இரண்டு ஆண்டுகள் முடிந்தும் அதிகாரிகள் அலட்சியத்தால் மக்கள் பயன்பாட்டிற்கு வராமல் காட்சிப் பொருளாக இருப்பதால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

அணைக்கரை கீழணையில் இருந்து மழைக்காலங்களில் உபரி நீராக ஒவ்வொரு ஆண்டும் 20 டி.எம்.சி தண்ணீர் கொள்ளிடம் ஆற்றில் வெளியேற்றப்பட்டு வீணாக கடலில் கலக்கிறது. கடலுார், தஞ்சை, மயிலாடுதுறை மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் உயரும் வகையிலும், கொள்ளிடம் ஆறு மூலம் கடலில் வீணாக கலக்கும் உபரி நீரை சேமிக்கும் வகையில் ஆதனுார் - குமாரமங்கலம் தடுப்பணை பாலம் கட்டப்பட்டது.

இந்த ஆண்டு போதிய மழை இல்லாததால் நிலத்தடி நீர் மட்டம் ஒரு மீட்டர் அளவுக்கு மேல் குறைந்துவிட்டது. இதனால் காட்டுமன்னார்கோயில் பகுதியில் 30க்கும் மேற்பட்ட கிராமங்கள் குடிநீர் தட்டுப்பாட்டால் அவதி அடைந்து வருகின்றனர்.

எந்த நோக்கத்திற்காக தடுப்பணை கட்டப்பட்டுதோ, அந்த நோக்கம் நிறைவேற்றப்படாமல் கிடப்பில் கிடக்கிறது.

ஆதனுார் தடுப்பணை பாலம் கட்டுவதற்கு கொள்ளிடம் ஆற்றில் இரு கரையையொட்டி இருந்த ஆற்றுப்படுகை புஞ்சை நிலங்கள் விவசாயிகளிடம் இருந்து கடலுார் மாவட்டத்தில் 98 ஏக்கரும், தஞ்சை மாவட்டத்தில் 135 ஏக்கர் நிலம் அரசு கையகப்படுத்தியது. தஞ்சை மாவட்ட விவசாயிகள் கையகப்படுத்திய புஞ்சை நிலங்களுக்கு கூடுதல் தொகை வழங்க வேண்டும் என மதுரை கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு நிலுவையில் இருப்பதால், தஞ்சை விவசாயிகளுக்கு ஆற்றுப்படுகை நிலங்களுக்கு தொகை வழங்க முடியாமல் அதிகாரிகள் கிடப்பில் போட்டுள்ளனர்.

அதனால் பல நுாறு கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட தடுப்பணை மதகு பயன்பாட்டிற்கு வராமல் அவல நிலையில் உள்ளது. ஆதனுார் - குமாரமங்கலம் தடுப்பணையை திறக்க வேண்டும் என விவசாய சங்கங்கள், அரசியல் கட்சிகள், பொதுமக்கள் என பல தரப்பில் கோரிக்கை வைத்தும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் தரப்பில் எந்த பலனும் இல்லை.

அதிகாரிகள் அலட்சியத்தால் கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லையே என விவசாயிகள் புலம்புகின்றனர்.

Advertisement