அடையாறு, கூவம் ஆறுகளை மேம்படுத்த சிறப்பு திட்டம்; பட்ஜெட்டில் மக்களுக்கு ஆசை காட்டியது தமிழக அரசு

20



நமது சிறப்பு நிருபர்




சென்னை அடையாறு, கூவம் ஆறுகளில் நன்னீர் செல்லும் வகையில், உலக அளவிலான 'டெண்டர்' கோரப்பட்டு, மறு சீரமைப்புத் திட்டம் செயல்படுத்தப்படும் என, தமிழக அரசு நேற்று வெளியிட்ட பட்ஜெட்டில் அறிவித்துள்ளது. இந்த ஆறுகளில் ஆனந்த குளியல் போடலாம்; படகு சவாரி செய்யலாம் எனவும், அதற்கேற்ப மேம்படுத்தப்படும் எனவும், மக்களுக்கு தமிழக அரசு ஆசை காட்டியுள்ளது.

சென்னை நகரின் முக்கிய அடையாளங்களாக கூவம் மற்றும் அடையாறு ஆறுகள் உள்ளன. ஒரு காலத்தில் படகு சவாரி நடந்த இந்த ஆறுகள் தற்போது, கழிவுநீர் கலப்பால், 'கப்பு' அடிக்கும் அளவுக்கு நிலைமை மோசமாகி உள்ளது. இந்த ஆறுகளை துாய்மைப்படுத்தவும், சுற்றுச்சூழல் ரீதியாக மீட்டெடுக்கவும், தி.மு.க., - அ.தி.மு.க., அரசுகள் முயற்சி மேற்கொண்டன.

கூவம் ஆறு சீரமைப்புக்கு, 604.77 கோடி ரூபாய் செலவிடப்பட்டது. ஆற்றின் கரையோரங்களை ஆக்கிரமித்து அமைக்கப்பட்ட குடிசைகள் அகற்றப்பட்டு, அங்கிருந்தோர் மறு குடியமர்வு செய்யப்பட்டனர். தடுப்பு வேலிகள் அமைத்து, கரையோரங்களில் மரக்கன்றுகள் நடப்பட்டன. ஆனாலும், விதிமீறி கழிவுநீர் கலப்பதை குடிநீர் வாரிய அதிகாரிகளாலும், மாநகராட்சியாலும் தடுக்க முடியவில்லை. இதனால், கூவம் தற்போது துர்நாற்றம் வீசி வருகிறது.

அதேபோல், அடையாறு ஆற்றை, 17,000 கோடி ரூபாயில் சீரமைக்க, திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டது. முதற்கட்டமாக, 4,778.26 கோடி ரூபாயில் பணிகள் தொடங்கப்பட்டன. பல்வேறு காரணங்களால் பணிகள்முடக்கப்பட்டன. இப்படி முக்கிய இரு ஆறுகளும் சீரழிந்துள்ள நிலையில், ஆட்சி மாற்றம் ஏற்பட்டு முதல்வரான த.வெ.க., தலைவர் விஜய், அவற்றை மீட்டெடுக்கும் சிறப்பு திட்டம் தயாரிக்க உத்தரவிட்டார்.

இந்நிலையில், நேற்று வெளியான தமிழக பட்ஜெட்டில், கூவம், அடையாறு ஆறுகள் சீரமைப்புத் திட்டம் செயல்படுத்தப்படும் என, நிதித்துறை அமைச்சர் மரிய வில்சன் அறிவித்துள்ளார்.

அவரது அறிவிப்பு:

* கூவம், அடையாறு ஆறுகளை அதன் இயல்பு நிலைக்கு கொண்டு வர, இந்த அரசு கடுமையாக பாடுபடும். அதற்கு, உலகளாவிய டெண்டர் கோரப்பட்டு, திட்ட அறிக்கை தயார் செய்யப்படும்.

* கூவம், அடையாறு ஆறுகளில் குழந்தைகள் ஆனந்த குளியலில் ஈடுபடுவதையும், அனைத்து வயதினரும் நதிக்கரையில் உடற்பயிற்சி செய்வதையும், படகு சவாரி செய்து துாய்மையான காற்றை சுவாசிப்பதையும் அரசு உறுதி செய்யும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


@block_Y@

பட்ஜெட் முக்கிய அறிவிப்புகள்;

* நகர்ப்புற வடிவமைப்பு மேம்பாடு, போக்குவரத்து வசதிகளுக்கு முன்னுரிமை அளித்து, விரிவான நகர்ப்புற போக்குவரத்து வசதிகள் மற்றும் தெருக்கள் மறுசீரமைப்புத் திட்டம் செயல்படுத்தப்படும். இதன் ஒருபகுதியாக சென்னையில், 20 இடங்களில் திறன்மிகு வாகன நிறுத்துமிடம் அமைக்கப்படும்; முக்கிய நடைபாதைகள் அழகுபடுத்தப்படும்.

* சென்னையில் குடிநீர் வினியோகத்தை அனைத்து பகுதிகளுக்கும் சீராக்கும் வகையில், குடிநீர் ஆதாரங்களையும், குடிநீர் வினியோக நிலையங்களையும் இணைக்கும், முதன்மை சுற்றுக்குழாய் திட்டம், 2031ம் ஆண்டுக்குள் முடிக்கப்படும்.

* சென்னை இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில், பூந்தமல்லி - போரூர் - வட பழனி இடையே, 14.64 கி.மீ., துாரம் பணிகள் முடிந்துள்ள நிலையில், விரைவில் மக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்படும்.

* சென்னை விமான நிலையம் - கிளாம்பாக்கம், கோயம்பேடு - ஆவடி - பட்டாபிராம், பூந்தமல்லி - ஸ்ரீபெரும்புதுார் - சுங்குவார்சத்திரம் வரை மெட்ரோ ரயில் திட்டப்பணிகள், மத்திய அரசின் விரைவான ஒப்புதல் பெற அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

* நடப்பு நிதி ஆண்டில், சென்னையில் 1,000 மின்சார 'ஏசி' பேருந்துகள் வாங்கப்படும் என, பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மின்சார பேருந்துகளை இயக்க, பணிமனைகளில் கட்டமைப்பு ஏற்படுத்த 500 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

* செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் சுற்றுலா பகுதிகள், 200 கோடி ரூபாயில் சர்வதேச தரத்திற்கு மேம்படுத்தப்படும். இதற்காக மானியம் கேட்டு, மத்திய அரசிடம் திட்ட அறிக்கை அனுப்பப்பட்டு உள்ளதாக, நிதியமைச்சர் மரிய வில்சன் தெரிவித்துள்ளார்.

* சென்னை பிராட்வேயில், 1,375 கோடி ரூபாய் செலவில், 160 நீதிமன்றங்களுடன் கூடிய ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் அமைக்கப்பட உள்ளது. இதன் முதற்கட்ட பணிகளுக்காக, 10 கோடி ரூபாயை, தமிழக அரசு பட்ஜெட்டில் ஒதுக்கியுள்ளது. block_Y


@block_G@

எல்லா வீட்டிலும் 'ஸ்மார்ட் 'மீட்டர்

சென்னையில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் மின் இணைப்புக்கான 'ஸ்மார்ட் 'மீட்டர்கள் பொருத்தப்படும். இந்த திட்டம் மாநிலத்தின் பிற பகுதிகளில் உள்ள தொழில் மற்றும் வணிக நிறுவனங்களுக்கும் விரிவாக்கம் செய்யப்படும். இதற்கான பட்ஜெட்டில் 50 கோடி ரூபாய் ஓதுக்கப்பட்டுள்ளது. block_G


@block_B@

இளைஞர்களுக்கு 'மை ஹோம்' திட்டம்

நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் வாயிலாக, 'மை ஹோம்' என்ற பெயரில், மாநகர இளைஞர் மற்றும் குடும்ப வீட்டுவசதி திட்டம் அறிமுகம் செய்யப்படும். இத்திட்டத்தில், அடுத்த ஏழு ஆண்டுகளில், ஒரு லட்சம் வீடுகள் கட்டப்படும். இதற்கு, 15,000 கோடி ரூபாய், தனியார் முதலீடு ஈர்க்கப்படும். மாநகர இளைஞர், குடும்ப வீட்டுவசதி திட்டத்துக்கு, இடைவெளி நிதியாக, தமிழக உறைவிட நிதியில் இருந்து, 3,500 கோடி ரூபாய் வழங்கப்படும்.

குறைந்த வருமானம் கொண்ட இளைஞர்கள், குடும்பத்தினர் தங்கள் வருவாய் நிலைக்கு ஏற்ப குடியிருப்புகள் பெற, மின்னணு வாடகை வவுச்சர்கள் அறிமுகம் செய்யப்படும். சென்னை பெருநகர் பகுதியில், 1,189 சதுர கி.மீ., பரப்பளவுக்கு, மூன்றாவது முழுமை திட்டத்தை சி.எம்.டி.ஏ., தயாரித்து வருகிறது.

சென்னை பெருநகர் விரிவாக்கத்தை கருத்தில் வைத்து, 5,904 சதுர கி.மீ., பரப்பளவுக்கு விரிவான மாஸ்டர் பிளான் தயாரிக்கப்படும். இதற்கு, 25 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.block_B

Advertisement