32 கொடையாளர்கள்... தந்தார்கள் மறுவாழ்வு! 99 உறுப்புகள் தானம்

கோவை: கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், மூளைச்சாவு அடைந்த 32 கொடையாளர்களிடம் இருந்து பெறப்பட்ட, 99 உடல் உறுப்புகள் மற்றும் 50 கண்விழித்திரையால், பலருக்கும் மறுவாழ்வு கிடைத்துள்ளது.


தமிழக அரசின் உறுப்பு தான திட்டத்தின் கீழ், கோவை அரசு மருத்துவமனையில், 2020ல் இருந்து, உறுப்பு தானம் மற்றும் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகள் நடக்கின்றன. இதுவரை, 32 பேரிடம் இருந்து 99 உறுப்புகள் பெறப்பட்டுள்ளன.

அவற்றில் 61 சிறுநீரகங்கள், 28 கல்லீரல்கள், 8 இதயங்கள், ஒரு நுரையீரல், ஒரு கணையம் ஆகியவை வெற்றிகரமாக மாற்று அறுவை சிகிச்சைக்குப் பயன்படுத்தப்பட்டுள்ளன.

இதுதவிர, 50 கார்னியா (கண் விழித்திரை) தானமாக பெற்று, பார்வை இழந்தவர்கள் மற்றும் மருத்துவ ஆராய்ச்சிக்கு பயன்படுத்தப்பட்டன.

ரத்த உறவுகளிடம் இருந்து உறுப்புகளை தானமாக பெற சென்னை, கோவை, மதுரை ஆகிய இடங்களில் அங்கீகார குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இக்குழு உடல் உறுப்பு தானமாக அளிப்பவர் மற்றும் பெறுபவரை, ஆய்வு செய்து உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு அனுமதி வழங்குகிறது.

இதன்படி, ரத்த உறவுகளிடம் இருந்து தானமாக பெற்று, 50 சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டுள்ளன. இருப்பினும், 200க்கு மேற்பட்ட நோயாளிகள் சிறுநீரகம் வேண்டி பதிவு செய்து காத்திருக்கின்றனர்.

முதலமைச்சரின் விரிவான காப்பீடு திட்டத்தின் கீழ், சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைகள், இலவசமாக செய்யப்படுகிறது.

அரசு மருத்துவமனையில்,கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சையை தொடங்குவதற்கு உரிமம் புதுப்பித்தல், அறுவை சிகிச்சை அரங்கு அமைத்தல் உள்ளிட்ட பணி நடப்பதாக, டாக்டர்கள் தெரிவித்தனர்.

மறைந்த பிறகும் பலருக்கு உயிரையே தரும் உறுப்பு தானம் செய்தோர் மரியாதைக்குரியவர்கள். இவர்களின் இறுதி பயணத்தில் கலெக்டர் அல்லது உள்ளூர் அமைச்சர் பங்கேற்று கவுரவிக்க வேண்டும்.

இதன் வாயிலாக உறுப்பு தானம் பற்றிய விழிப்புணர்வு அதிகரிக்கும்; கொடை அதிகரிக்கும்.

@quote@ மூளைச்சாவு அடைந்தவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு, உறுப்பு தானத்தின் முக்கியத்துவம் குறித்து விளக்கி வருகிறோம். முன்பிருந்ததை விட மக்களின் ஒத்துழைப்பு அதிகரித்துள்ளது.

- அமுதவாணன், ஒருங்கிணைப்பாளர் உடல் உறுப்பு தான திட்டம்quote

@block_B@

கிட்னிக்காக அதிகம் பேர் காத்திருப்பு

மூளைச்சாவு அடைந்தவர்களிடம் இருந்து உடல் உறுப்புகளை தானமாக பெறும் திட்டத்தில், தேசியளவில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. மாநில அளவில்,2008ல் இருந்து தற்போது வரை, 2,490 உறுப்பு கொடையாளர்களிடமிருந்து, 14,532 உடல் உறுப்புகள் தானமாக பெறப்பட்டுள்ளன. இருப்பினும், 8,955 பேர் உடல் உறுப்பு வேண்டி பதிவு செய்து காத்திருக்கின்றனர். சிறுநீரகம் வேண்டி மட்டும் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பதிவு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது. block_B

Advertisement