'ஒரு மாதத்துக்குள் 10 கிராம் தங்கத்தின் விலை 1.55 லட்சம் ரூபாயாக அதிகரிக்க வாய்ப்பு'

சர்வதேச சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளி விலை மீண்டும் ஏற்றம் கண்டுள்ளது. ஹார்முஸ் ஜலசந்தி தொடர்பான பதற்றம் தணிந்தது, அமெரிக்காவில் வட்டி விகித உயர்வு குறித்த எதிர்பார்ப்பு குறைந்தது, டாலர் மதிப்பு சரிந்தது உள்ளிட்ட காரணங்களால் இந்த ஏற்றம் ஏற்பட்டுள்ளதாக சந்தை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து காம்ட்ரெண்ட்ஸ் நிறுவனத்தின் இயக்குநர் ஞானசேகரன் கூறியதாவது:

அமெரிக்க மத்திய வங்கி செப்டம்பரில் வட்டி விகிதத்தை உயர்த்தும் என்ற சந்தை எதிர்பார்ப்பு, இரண்டு நாட்களுக்கு முன்பு இருந்த 67 சதவீதத்திலிருந்து தற்போது 55 சதவீதமாக குறைந்துள்ளது. இதனால், எதிர்காலத்தில் வட்டி விகித உயர்வுக்கு பதிலாக வட்டி குறைப்பு மேற்கொள்ளப்படலாம் என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

Tamil News

மேலும், செயற்கை நுண்ணறிவு பயன்பாடு அதிகரிப்பதும், பொருளாதார மந்தநிலையும் வேலைவாய்ப்பை பாதித்துள்ளதால், பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்க வட்டி குறைப்பு அவசியமாகலாம்.

மேலும், அமெரிக்க டாலரின் மதிப்பு சரிந்ததுடன், அமெரிக்க அரசு பத்திரங்களின் வருவாய் விகிதமும் குறைந்துள்ளது. இதனால், தங்கத்தில் முதலீடு செய்வது முதலீட்டாளர்களுக்கு அதிக கவர்ச்சிகரமாக மாறி, தங்கம் மற்றும் வெள்ளி விலைக்கு ஆதரவாக அமைந்துள்ளது.

ஒரு மாதத்துக்குள் 10 கிராம் தங்கத்தின் விலை 1.55 லட்சம் ரூபாய் வரையிலும், ஒரு கிலோ வெள்ளியின் விலை 2.50 லட்சம் ரூபாய் வரையிலும் உயர வாய்ப்பு உள்ளது. இருப்பினும், மத்திய கிழக்கில் புவிசார் அரசியல் பதற்றம் மீண்டும் தீவிரமடைந்தால், விலை நகர்வில் மாற்றம் ஏற்படக்கூடும்.

விலை வித்தியாசம்

தங்கம், வெள்ளியை நகை அல்லது கட்டிகளாக வாங்கி விற்பனை செய்யும்போதும், ஸ்பாட் சந்தை விலையுடன் ஒப்பிடும்போதும் விலை வித்தியாசம் இருப்பது இயல்பானது. ஆனால், தங்கம் மற்றும் வெள்ளி இ.டி.எப்.க்கள் அல்லது இ.ஜி.ஆர்., ஆகியவற்றில் இந்த விலை வித்தியாசம் மிகவும் குறைவாகவே இருக்கும்.

மேலும், எந்த கமாடிட்டியின் விலையும் திடீரென உயர்ந்தால், அது உடனடியாக சரிவதில்லை. பொதுவாக சில வாரங்கள் அல்லது ஒரு மாதம் வரை ஒரே நிலைக்கு அருகில் நீடிக்கும்.

கடந்த ஒரு மாதமாக தங்கம் மற்றும் வெள்ளி விலை பெரிய ஏற்ற இறக்கமின்றி நிலைத்திருந்ததால், தற்போது கடைவிலைக்கும், ஸ்பாட் விலைகளுக்கு இடையேயான வித்தியாசம் அதிகமாக தெரிகிறது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

ஒரு கிலோ வெள்ளியின் விலை 2.50 லட்சம் ரூபாய் வரையிலும் உயர வாய்ப்பு.

Advertisement