மறைமுக கட்டணம் விதித்த ஆன்லைன் தளங்களுக்கு அபராதம்!
புதுடில்லி: 'ஆன்லைன்' வர்த்தக தளங்களில் நுகர்வோரை தவறாக வழிநடத்தும் வடிவமைப்புகள் மற்றும் மறைமுக கட்டணங்கள் வசூலித்ததற்காக, 'செப்டோ, புக்மைஷோ' உள்ளிட்ட ஒன்பது, 'டிஜிட்டல்' நிறுவனங்களுக்கு, மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் பல லட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது.
நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தின் கீழ், மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் கடந்த 2020ல் நிறுவப்பட்டது. இந்த ஆணையம், நுகர்வோர் உரிமைகளைப் பாதுகாக்கவும், நியாயமற்ற வர்த்தக நடைமுறைகள், தவறான விளம்பரங்களை தடுக்கும் நடவடிக்கைகளையும் மேற்கொள்கிறது.
இந்த ஆணையம், 'அமேசான், பிளிப்கார்ட்' போன்ற, 'ஆன்லைன்' வர்த்தக தளங்களை நேரடி விற்பனையாளர்களாக கருதி, நுகர்வோர் உரிமை மீறல்களுக்கு பொறுப்பாக்கி நடவடிக்கை எடுக்கிறது.
மேலும், ஆன்லைனில் பொருட்கள் மற்றும் சேவைகளை பெறும் நுகர்வோரை ஏமாற்றி அல்லது கட்டாயப்படுத்தி தேர்வு செய்ய துாண்டும் வடிவமைப்புகள், கட்டண விபரங்களை தடுக்க, 2023ல் நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் வழிகாட்டல்களை வெளியிட்டுள்ளது.
தவறான விளம்பரங்கள்
அதன்படி பயனர் பயன்படுத்தும் செயலியின் திரையில் ஏமாற்றும் வடிவமைப்புகள் இடம்பெற்று, அவை நுகர்வோரின் முடிவெடுக்கும் திறனை குறைத்தால், அவை தவறான விளம்பரங்கள், நியாயமற்ற வர்த்தக நடைமுறை என கருதப்படும். அந்த வழிகாட்டலில், 13 வகை விஷயங்கள் ஏமாற்றும் வடிவமைப்புகள் என வகைப்படுத்தப்பட்டு உள்ளன.
ஒரு பொருளை ஆன்லைனில் வாங்க பார்த்துக் கொண்டிருக்கும் போது இரண்டு பொருட்கள் மட்டுமே இருப்பில் உள்ளன; 30 பேர் வாங்க முயற்சிக்கின்றனர் போன்ற போலியான அவசர நிலையை ஏற்படுத்துவது.
பயனர் ஒப்புதல் இல்லாமல் கூடுதல் பொருட்கள் அல்லது நன்கொடை போன்றவற்றை கட்டண பட்டியலில் சேர்ப்பது. குறைந்த விலை காட்டி, பின்னர் அதிக விலைக்கு மாற்றுதல். முழு விலையை முதலில் காட்டாமல், இறுதியில் கூடுதல் கட்டணங்கள் சேர்த்தல் ஆகியவை இதில் அடக்கம்.
இந்த செயல்களுக்கு எதிராக நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து, ராஜ்யசபாவுக்கு மத்திய அரசு அளித்த எழுத்துப்பூர்வ பதிலில் கூறியதாவது:
கடந்த 2023ல், 'டார்க் பேட்டர்ன்' எனப்படும் நுகர்வோரை தவறாக வழிநடத்தும் நடைமுறைகளை தடுக்கும் வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டன.
அறிவுறுத்தல்
இணையதளங்கள் மற்றும் மொபைல் போன் செயலிகளில், நுகர்வோரின் விருப்பத்திற்கு மாறாக முடிவுகளை எடுக்க வைக்கும் வடிவமைப்புகள் மற்றும் நடைமுறைகள் இதில் தடை செய்யப்பட்டுள்ளன.
இதை மீறியதற்காக பல்வேறு நிறுவனங்களுக்கு லட்சக்கணக்கில் அபராதம் விதிக்கப்பட்டது. அவை, அதன் பின் அந்த நடைமுறையை கைவிட்டன.
'செப்டோ' எனப்படும் மளிகை பொருட்களை விரைவாக வினியோகம் செய்யும் செயலியில் ஆரம்பத்தில் காட்டப்பட்ட விலைக்கு பின் கையாளுதல் கட்டணம், சந்தா கட்டணம் ஆகியவை சேர்க்கப்பட்டதால், 7 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
'புக்மைஷோ' எனப்படும் சினிமா உட்பட பல்வேறு நிகழ்ச்சிகளுக்கான டிக்கெட் முன்பதிவு செய்யும் தளத்தில், நன்கொடையாக 1 ரூபாய் முன்கூட்டியே தேர்வு செய்யப்பட்டிருந்த நடைமுறையை நீக்க உத்தரவிடப்பட்டது.
'இண்டிகோ' விமான சேவை செயலியில், கூடுதல் சேவையை மறுப்பவர்களுக்கு, 'நான் ரிஸ்க் எடுக்க தயார்' என்ற அழுத்தம் தரும் வாசகம் பயன்படுத்தப்பட்டது. அதை மாற்ற அறிவுறுத்தப்பட்டது.
'பிசிக்ஸ் வாலா' ஆன்லைன் கல்வி நிறுவன தளத்தில் இலவச பாடங்களை அணுக தனிப்பட்ட தகவல்கள் கோரியதால், 5 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
இது தவிர, 'பர்ஸ்ட்கிரை, பார்ம்ஈசி, ஸ்பைஸ்ஜெட்' ஆகிய நிறுவனங்களுக்கு, 3 லட்சம் ரூபாய் முதல் 1 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்பட்டது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும்
-
போலீஸ் செய்திகள்...திண்டுக்கல்
-
அதிகாரிகள் ஒத்துழைப்பு இல்லை
-
உயரதிகாரிகள் மீது லஞ்ச புகார் வந்தாலும் உடனே நடவடிக்கை எடுக்க அரசு உத்தரவு
-
ஏனாதியில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்க கோரிக்கை
-
ராமேஸ்வரம் மீனவருக்கு சிறைக்காவல் நீட்டிப்பு
-
அரசு மருத்துவமனையில் கூட்டமாக திரியும் நாய்களால் மக்கள் அச்சம்