ஏனாதியில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்க கோரிக்கை

முதுகுளத்துார்: முதுகுளத்துார் அருகே ஏனாதி கிராமத்தில் 300 குடும்பங்கள் வசிக்கின்றன. குடிநீர் தேவைக்காக 1999ம் ஆண்டு நரிப்பையூர் கடல் நீரை நன்னீராக்கும் திட்டத்திற்காக குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டது. திட்டம் 10 ஆண்டுகளில் நிறுத்தப்பட்டதால் காவிரி குடிநீர் ஏற்றப்பட்டு வினியோகம் செய்யப்பட்டு வந்தது. தற்போது தொட்டி வலுவிழந்து காணப்படுகிறது. காவிரி குடிநீரும் வருவது கிடையாது. இதனால் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி காட்சிப்பொருளாக உள்ளது.

மக்கள் டிராக்டர் தண்ணீரை விலைக்கு வாங்கி பயன்படுத்தும் அவலநிலை உள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்திற்கு கரூர் கூட்டு குடிநீர் திட்டப் பணிகள் நடந்து வருகிறது. இத்திட்டத்தின் கீழ் ஏனாதியில் புதிதாக மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்கப்படவில்லை.

இதற்கு பதிலாக பழைய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை பயன்படுத்துவதற்கும் வாய்ப்பு உள்ளது. எனவே அதிகாரிகள் பழைய தொட்டியை அகற்றி புதிதாக தொட்டி கட்டுவதற்கும், தடையின்றி காவிரி குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

Advertisement