போலீஸ் செய்திகள்
பங்குச்சந்தையில் முதலீடு : ரூ.6.07 லட்சம் மோசடி மதுரை: பசுமலையைச் சேர்ந்த ஒருவரின் அலைபேசி எண் பங்குச்சந்தை நிறுவனம் ஒன்றின் பெயரிலான வாட்ஸ் அப் குரூப்பில் இணைக்கப்பட்டது. முதலீடு செய்தால் அதிக லாபம் பெறலாம் என தெரிவித்ததால் பல்வேறு தவணைகளில் ரூ.6.07 லட்சம் அனுப்பினார். அந்த தொகைக்கு பங்குகள் வாங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. சில நாட்களுக்குப் பிறகு முதலீட்டுத் தொகையை திரும்பப் பெற முயன்றபோது தான் மோசடி செய்யப்பட்டதை உணர்ந்து போலீசில் புகார் செய்தார். விசாரணை நடக்கிறது.
போலி நகை: இருவர் கைது உசிலம்பட்டி: இப்பகுதி அடகுக்கடையில் தும்மக்குண்டு உடையாம்பட்டி வசந்தா 60, திருமங்கலம் பெருமாள்கோவில்பட்டி சர்மா 22, ஆகியோர் இரண்டு வளையல்கள், மோதிரத்தை அடகு வைக்க வந்தனர். ஆய்வில் போலி நகைகள் எனத்தெரிந்தது. இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
உசிலம்பட்டி குற்றவாளி ஆந்திர போலீசாரால் கைது உசிலம்பட்டி: எ.கன்னியம்பட்டி ஜெயபால் 46. முறுக்கு தொழில்செய்ய 20 ஆண்டுகளுக்கு முன் ஆந்திரா சென்றவர், அங்கு கஞ்சா கடத்தி விற்றார். கடந்தாண்டு 313 கிலோ கஞ்சா கடத்திய வழக்கில் இவரை ஆந்திரா மாநிலம் ஸ்ரீபொட்டி ஸ்ரீராமுலு நெல்லுார் மாவட்டம், தகதர்த்தி போலீசார் தேடி வந்தனர். கன்னியம்பட்டியில் இருப்பதாக தகவல் அறிந்து நேரில் வந்த ஆந்திரா போலீசார் உசிலம்பட்டி போலீசார் உதவியுடன் ஜெயபாலை கைது செய்து அழைத்துச் சென்றனர்.
300 கிலோ புகையிலையுடன் இருவர் கைது மேலுார் : எஸ்.பி. சிறப்பு பிரிவு எஸ்.ஐ., தினேஷ் தலைமையில் போலீசார் மெயின் ரோட்டில் காரை சோதனையிட்டனர். பெங்களூருவில் இருந்து தடை செய்யப்பட்ட புகையிலையை போலி பதிவெண் கொண்ட காரில் கடத்தியது தெரிய வரவே ராஜஸ்தான் மாநிலம் திலீப் குமார் 28, நிலேஷ் சிங் ராஜ்புர் சீட் 23, ஆகியோரை கைது செய்து 300 கிலோ புகையிலையை பறிமுதல் செய்தனர்.
நகை பறிக்க முயன்ற இருவர் கைது மேலுார்: அ.புதுப்பட்டியைச் சேர்ந்தவர் கலைச்செல்வி. நேற்று மாலை போனில் வெளிநாட்டில் வசிக்கும் கணவருடன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது கதவு தட்டும் சத்தம் கேட்டு திறந்தபோது அப்பகுதி பரசுராமன் 25, அவரது நண்பர் சிங்கம்புணரி ரஞ்சித் 25, கோவில்பட்டி தினேஷ் ஆகியோர் நகையை பறிக்க முயன்றனர். மனைவியின் அலறல் சத்தத்தை போனில் கேட்ட கணவர், உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக அங்கு வந்த உறவினர்கள் அவர்களை பிடித்து வைத்து கீழவளவு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இருவரையும் போலீசார் கைது செய்தனர். தப்பி ஓடிய தினேஷை தேடி வருகின்றனர்.
தேடப்படும் குற்றவாளிகள் மதுரை: தேனி மாவட்டம் போடியைச் சேர்ந்தவர் முகமது தாஹிர். இவர் மீது 2015ல் மதுரை திடீர்நகர் போலீசாரால் திருட்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டது. ஊமச்சிக்குளம் முருகேசன். இவர் மீது 2005ல் கொள்ளை வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இவர்கள் நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகவில்லை. இவர்களை 'தேடப்படும் குற்றவாளியாக' அறிவித்துள்ள மதுரை ஜே.எம். கோர்ட் எண் 5, அடுத்த விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.