இந்தியர்களின் மருத்துவ தரவுகள் சிங்கப்பூருக்கு கசிந்ததால் அதிர்ச்சி; மத்திய அரசு பதிலளிக்க கோர்ட் உத்தரவு

2

- டில்லி சிறப்பு நிருபர் -

நாடு முழுதும், 1.5 லட்சம் பேரின் மருத்துவ தரவுகள் சட்டவிரோதமான முறையில் சிங்கப்பூருக்கு கசிந்த விவகாரம் தொடர்பாக, மத்திய அரசு பதில் அளிக்க உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் பிறப்பித்துள்ளது.

பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த, 'வித்ரயா டெக்னாலஜிஸ்' என்ற நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்தது.

அதில், 'நாடு முழுதும் 1.5 லட்சம் பேரின் மருத்துவ பரிசோதனை விபரங்கள், நோய் கண்டறியப்பட்ட தகவல்கள், மருந்து சீட்டுகள், முகவரி மற்றும் தனிநபர் அடையாள எண்கள் உள்ளிட்ட முக்கியமான தரவுகள் சட்டவிரோதமாக சிங்கப்பூரில் உள்ள சர்வருக்கு பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளன.

'தரவுகள் கசிவு குறித்து கடந்த ஆண்டு மார்ச்சில் பஞ்சாப் போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டது. ஆனால், போலீசார் விசாரணையில் தீவிரம் காட்டாமல் மெத்தனமாக செயல்படுகின்றனர். எனவே, இந்த விவகாரம் குறித்து விசாரிக்க சி.பி.ஐ.,க்கு உத்தரவிட வேண்டும்' என கோரப்பட்டது.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த், நீதிபதிகள் ஜாய்மால்யா பக்சி மற்றும் வி.மோகனா அடங்கிய அமர்வில் நேற்று இம்மனு விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பரமேஸ்வர், ''இந்த விவகாரம் மிகவும் தீவிரமானது. தகவல் கசிவு எப்படி; எங்கு இருந்து நிகழ்ந்தது? இதற்கு யார் பொறுப்பு என்பதை உடனடியாக கண்டறிய வேண்டும்,'' என்றார்.

இதையடுத்து, இம்மனுவுக்கு விரிவாக பதில் அளிக்குமாறு மத்திய அரசுக்கு நோட்டீஸ் பிறப்பிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மேலும், அதிகரித்து வரும் சைபர் குற்றங்களுக்கு ஏற்ப, தகவல் தொழில்நுட்ப சட்டத்தில் தேவையான திருத்தங்களை கொண்டு வருவது குறித்து மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தி, வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.

Advertisement