'காங்கேயம் மாடுகள் எங்கள் வாழ்வின் ஓர் அங்கம்!'
மாடுகள் வளர்ப்பில், ஆண்டுக்கு 40 லட்சம் ரூபாய்க்கு மேல் வருமானம் ஈட்டும், ஈரோடு மாவட்டம், செம்மம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த, 69 வயதாகும் விவசாயி சுப்ரமணி:
காங்கேயம் மாடுகள் வளர்ப்பும், விவசாயமும் தான் எங்கள் குடும்பத் தொழில். அப்பா, 60க்கும் மேற்பட்ட காங்கேயம் மாடுகளை வளர்த்து வந்தார். அவை நீண்ட நேரம் உழைத்தாலும் சோர்வடையாது; எப்போதும் சுறுசுறுப்பாகவும், வேகமாகவும் இயங்கும்.
உடம்பு, முகம், உள்நாக்கு எல்லாமே கருமை நிறத்தில் இருப்பதுடன், பால் சுரக்கும் மடியும், காம்புகளும் கருமை நிறத்தில் இருக்கும் என்பதால், 'காராம் பசு' என அழைப்பர்.
பண்ணையில் எப்போதும் ஆறு மாடுகள் வரை கறவையில் இருக்கும். ஒரு பசுவிடம் தினமும் இரண்டு வேளையும் சேர்த்து, 6 லிட்டர் பால் கிடைக்கும். காராம் பசும்பால், 1 லிட்டர் 130 ரூபாய்க்கும், காங்கேயம் பசும்பால், 1 லிட்டர் 100 ரூபாய்க்கும் விற்பனை செய்கிறோம்.
ஒரு மாதத்திற்கு, 1,050 லிட்டர் பால் விற்பனை வாயிலாக, 1.20 லட்சம் ரூபாய் வருமானமும், ஒரு மாதத்திற்கு, 24 கிலோ நெய்யும் கிடைக்கும். அதை, 1 கிலோ 2,000 ரூபாய் என விற்பனை செய்வதன் வாயிலாக, மாதம் 48,000 ரூபாய் கிடைக்கிறது.
பால் மற்றும் நெய் வருமானம் வாயிலாக ஆண்டுக்கு, 20 லட்சத்து 16,000 ரூபாய் வருமானம் கிடைக்கிறது.
சுற்றுவட்டார பகுதிகளில் காங்கேயம் பசுக்களை வளர்க்கும் விவசாயிகள், எங்கள் காங்கேயம் காளைகளோடு இனச்சேர்க்கை செய்ய அழைத்து வருவர். ஒருமுறை இனச்சேர்க்கை செய்ய, 2,000 ரூபாய் கட்டணம் வாங்குகிறோம். ஓராண்டுக்கு சராசரியாக, 500 பசு மாடுகளுக்கு இனச்சேர்க்கை செய்ய வைப்பதன் வாயிலாக, 10 லட்சம் ரூபாய் வருமானம் கிடைக்கிறது.
இங்கு பிறக்கும் கன்றுக்குட்டிகளுக்கு, அதிக சத்துக்கள் நிறைந்த தீவனம் கொடுத்து ஓராண்டு வரை வளர்த்து, விற்பனை செய்து விடுவோம். அதுமட்டுமல்லாமல், சுற்று வட்டாரங்களில் விவசாயிகளிடம் இருந்து, காங்கேயம் கன்றுக்குட்டிகள் வாங்கி, அதை வளர்த்தும் விற்பனை செய்கிறோம்.
இதுபோன்று, ஆண்டுக்கு 100 கன்றுக்குட்டிகள் வரை விற்பனை செய்வதன் மூலம், 25 லட்சம் ரூபாய் கிடைக்கிறது. பண்ணையில் உள்ள மாடுகளுக்கு அடர்தீவனம், மருத்துவம், பணியாளர்கள் சம்பளம் என அனைத்து செலவுகளும் போக, குறைந்தபட்சம் ஆண்டுக்கு, 15 லட்சம் ரூபாய் லாபம் வருகிறது.
மாடுகள் வாங்கி விற்பனை செய்வதன் வாயிலாக கிடைக்கும் லாபத்தையும் சேர்த்தால், ஆண்டுக்கு, 40 லட்சம் ரூபாய்க்கு மேல் லாபம் கிடைக்கிறது.
காங்கேயம் மாடுகள் வளர்ப்பதை வாழ்வாதாரமாக மட்டும் பார்க்காமல், வாழ்வின் ஓர் அங்கமாகவே நேசிக்கிறோம்.
தொடர்புக்கு: 98423 80003